சென்னை: Vadivelu Salary (வடிவேலு சம்பளம்) வடிவேலு தனக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுக்கும்படி கேட்டதையடுத்து அவர் மீது இயக்குநர் கோபப்பட்ட சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
அரண்மனை கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வடிவேலு. கவுண்டமணி, செந்தில் ஆகியோர் கோலோச்சி இருந்த காலத்தில் உள்ளே நுழைந்து ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர். பின்பு தனது திறமையை வளர்த்துக்கொண்டு படிப்படியாக முன்னேறினார். பிறரை நக்கலடிப்பதுதான் காமெடி என்ற ஃபார்முலாவை உடைத்து தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு வடிவேலு செய்த காமெடி வரவேற்பை பெற்றது.
வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல: நகைச்சுவை நடிகராக வளர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை வடிவேலு. மாறாக நடனம் ஆடுவது, பாடல்கள் பாடுவது, குணச்சித்திர வேடத்தில் நடிப்பது எனவும் பல்வேறு தன்னை நிரூபித்தார். குறிப்பாக எந்த அளவுக்கு தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பாரோ அதே அளவு தனது குணச்சித்திர நடிப்பால் கலங்க வைக்கவும் செய்வார் வடிவேலு.
வடிவேலு உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்: 90களின் இறுதியில் வடிவேலுவின் சாம்ராஜ்ஜியம் ஆரம்பித்தது. தனது உடல்மொழியாலும், தன்னை தானே மட்டம் தட்டிக்கொண்டு செய்த காமெடியாலும் பலரது மனங்களிலும் நுழைந்து நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டார்.
சந்திரமுகி படம் ஆரம்பிக்கும்போது வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிடுங்கள் என ரஜினியே பி.வாசுவிடம் கூறும் அளவுக்கு பிஸியாக இருந்தார் வடிவேலு. பெரிய ஹீரோக்கள், சிறிய ஹீரோக்கள் என யாருடன் கூட்டணி போட்டாலும அந்த காமெடி மிகப்பெரிய ஹிட்டடித்தது.
பிரச்னையை சந்தித்த வடிவேலு: நிலைமை சீராக சென்றுகொண்டிருக்க 2011 தேர்தலின்போது அரசியல் மேடையில் ஏறினார் வடிவேலு. அதன் பிறகு அவருக்கு பிரச்னைகள் ஆரம்பிக்க ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து முழுதாக ஒதுக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவரை சுற்றி இருந்த பிரச்னைகளும், பஞ்சாயத்துக்களும் பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார்.
அதேபோல் ஹீரோவாக நாய் சேகர் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தை தவிர்த்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் தனுஷ்- மாரி செல்வராஜ் இணையவிருக்கும் படத்திலும் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு மணிநேரத்துக்கு லட்ச ரூபாய்: வடிவேலு இப்போது பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். குறிப்பாக அவர் பீக்கில் இருந்தபோது ஒரு மணிநேரத்துக்கு பல லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றவர். ஆனால் தனது ஆரம்பகாலத்தில் சில ஆயிரங்களுக்காக நடித்தவர். அப்படி சில ஆயிரங்களை கேட்டவர் ஒரு படத்துக்காக சம்பளத்தை ஏற்றிக்கேட்டதற்கு இயக்குநர் கோபப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கிழக்கு சீமையிலே: அதாவது கிழக்கு சீமையிலே படத்தை பாரதிராஜா இயக்கினார். அந்தப் படம் 1993ஆம் ஆண்டு வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். நெப்போலியன், விஜயகுமார், ராதிகா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் வடிவேலு சோலோ காமெடியனாக கலக்கியிருப்பார். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சம்பளத்தை ஏற்றிக்கேட்ட வடிவேலு: இந்தப் படத்தில் நடித்தபோது பாரதிராஜாவிடம் சென்ற வடிவேலு தனக்கு 25,000 ரூபாய் சம்பளமாக கொடுங்கள் என கேட்டாராம். அதற்கு உடனே கோபப்பட்ட பாரதிராஜா, நீ இந்தப் படத்தில் நடிக்கவே வேண்டாம் கிளம்பு என்று ஒரே அடியாக சொல்லிவிட்டாராம். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வடிவேலு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வந்துவிட்டாராம்.
சம்பளம் கொடுத்த தாணு: இந்த விஷயம் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு தெரிய வந்ததாம். உடனடியாக வடிவேலுவை தனது அலுவலகத்துக்கு அழைத்த தாணு, 25,000 ரூபாயை கொடுத்து அனுப்பினாராம். அதுமட்டுமின்றி, ஏன் ப்பா சம்பளம் விஷயம்லாம் எனட்ட நீ கேட்க வேண்டியதுதானே. ஏன் அவர்ட்ட போய் கேட்குற எனவும் அறிவுறுத்தினாராம். இந்தத் தகவலை தாணு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.