சென்னை: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் தமிழக பாஜக குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
பாஜக மூத்த தலைவர்கள் விபி துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து ஆடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “ஆடியோ விவகாரத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்மீது நடவடிக்கை எடுத்து தடயவியல் விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும். ஆடியோவில் இருப்பது அவர் குரல் தானா அல்லது வேறு ஒருவரின் குரலா என்பதை கண்டறியும்படி ஆளுநரிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் தலைவர் ஆளுநர்தான். அதனால், அவரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். ஆளுநரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அரசின் கஜானாவுக்கு செல்ல வேண்டியது தமிழக மக்களின் வரிப்பணம். மக்களின் வரிப்பணத்தை கொண்டு நன்மை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் 30 ஆயிரம் கோடியை எடுத்துவிட்டார்கள் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.
பிடிஆரும் சபரீசனும் உறவினர்கள்தான். இதனால், ஸ்டாலினையும் பிடிஆரையும் பிரிக்க வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. மக்கள் வரிப்பணம் தனி மனிதனிடம் சென்றுவிட்டதே என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்தச் சூழலில் அது ‘போலியானது’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.