சென்னை : பிரபல நடிகர் சரத் பாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1951ம் ஆண்டு பிறந்த சரத் பாபு,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1973ஆம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகரான சரத் பாபு, பட்டின பிரவேசம் என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
பல ஹிட் படங்களில் : சரத்பாபுவின் முதல் படம் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், உயிருள்ளவரை, முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற ஹிட் படங்களில் நடித்து பெயர் எடுத்தார்.
நெருங்கிய நண்பர்கள் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பனாக பல படங்களில் நடித்துள்ள சரத் பாபு, நிஜத்திலும் அவரின் நெருங்கிய நண்பராக உள்ளார். ரஜினிகாந்த், சரத் பாபு இருவரும் சேர்ந்து நடித்த அண்ணாமலை திரைப்படம் இன்று வரை நட்புக்கு இலக்கணம் வகுக்கும் படமாகவே உள்ளது. ரஜினிகாந்த் ஹிட் படங்களில் இப்படமும் ஒன்று.
மருத்துவமனையில் சிகிச்சை :71 வயதான சரத் பாபு வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஹைதராபாத்தில் தனது வீட்டில் இருந்த நிலையில், திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மூன்று வாரங்களாக அவருக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென இன்று, சரத் பாபுக்கு திடீரென உடல்நிலை மோசமானதை அடுத்து ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கவலைக்கிடமான நிலையில் : தற்போது, சரத் பாபுவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடலில், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் செயலிழந்து விட்டதாகவும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.