சண்டிகர்: இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் தினசரி எல்லைப் பாதுகாப்பு பணிக்கு சென்று வருகின்றனர்.. இந்நிலையில் ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்று ரஜோரி-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் பிம்பர் காலி பகுதியில் இருந்து சாங்கியோட் நோக்கி 3 நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தது.
அப்போது தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் ராணுவ வாகனத்தில் இருந்த ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
சம்பவத்தில் உயிரிழந்த பஞ்சாப் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரண நிதியை வழங்குவதாகவும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே நேற்று பஞ்சாப் ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு அவர்களது சொந்த கிராமத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக அவரவர் கிராமங்களுக்கு ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்களின் உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.
தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குல்வந்தின் உடலுக்கு மோகா மாவட்டம் சாரிக் கிராமத்தில் நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் பாரத் மாதாவுக்கு ஜே, ராணுவ வீரர்கள் வாழ்க போன்ற கோஷங்கள் இறுதி அஞ்சலி செலுத்தும்போது எழும்பின. அவரது உடலுக்கு கிராம மக்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அவரது மறைவால் கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது.
அதைப் போலவே மன்தீப் சிங்கின் உடலுக்கு சாங்கியோட் கிராமத்திலும், ஹர்கிருஷன் சிங்கின் உடலுக்கு தல்வான்டி கிராமத்திலும், சேவக் சிங்கின் உடலுக்கு பாகா கிராமத்திலும் கிராம மக்கள் திரண்டு கண்ணீர் செலுத்தினர். 4 பேரின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடை பெற்றன.
ரமலான் கொண்டாட்டத்தை தவிர்த்த கிராமம்
தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், சாங்கியோட் கிராமத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெறவிருந்த ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான பழங்கள் மற்றும் பிற பொருட்கள் இருந்தன. அந்த வாகனம் தீயில் கருகி 5 வீரர்கள் உயிரிழந்ததால், சாங்கியோட் கிராமத்தில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சாங்கியோட் பஞ்சாயத்து தலைவர் முக்தியாஸ் கான் கூறும்போது, “நமது வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்திருக்கும் போது என்ன நோன்பு திறப்பு வேண்டியுள்ளது? எங்கள் கிராமத்தில் சனிக்கிழமை ரமலான் கொண்டாட மாட்டோம். தொழுகையில் மட்டுமே ஈடுபடுவோம்” என்றார்.