தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. மொழித்தாள் (ஏப்ரல் 6), ஆங்கிலம் (ஏப்ரல் 10), கணிதம் (ஏப்ரல் 13), அறிவியல் (ஏப்ரல் 15), சமூக அறிவியல் (ஏப்ரல் 20) என வரிசையாக தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த தேர்வை எழுத மொத்தம் 9,76,789 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில், தமிழகத்தில் இருந்து 9,22,725 பேர் அடங்குவர்.
பொது தேர்வை எதிர்கொள்ள பயமாக இருக்கிறதா? இந்த ஐடியா உங்களுக்குதான்..
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
புதுச்சேரியில் இருந்து 15,566 பேரும், தனித் தேர்வர்கள் 37,798 பேரும் இருந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிப் பாடத் தேர்வின் போது சர்ச்சை ஒன்று எழுந்தது. ஏனெனில் கேள்வி எண் 4, 5, 6 என மூன்றும் தவறாக கேட்கப்பட்டிருந்தன. அதாவது, கேள்வித்தாள் வடிவமைப்பின் படி மூன்று கேள்விகள் அருஞ்சொற்பொருள், மூன்று கேள்விகள் எதிர்ச்சொல் என இடம்பெற வேண்டும்.
5 மதிப்பெண்களில் சிக்கல்
ஆனால் 6 கேள்விகளும் அருஞ்சொற்பொருள் என்ற வகையில் இடம்பெற்றுவிட்டது. மேலும் 2 மதிப்பெண் கொண்ட 28வது கேள்வியும் தவறாக கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. இந்த கேள்விகள் சரியாக தான் கேட்கப்பட்டதா? இல்லை தவறா? அதற்குரிய மதிப்பெண்கள் கிடைக்குமா? போன்ற கேள்விகள் எழுந்தன.
ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகத்திற்கு மாநில பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது. அதாவது, 3 கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டதால் அதற்குரிய மதிப்பெண்களை அப்படியே வழங்க வேண்டும். 28வது கேள்விக்கு 2 மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை தேர்வுத்துறை இயக்குநரகம் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தது.
தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு
இந்த சூழலில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய 5 மதிப்பெண்களை முழுமையாக கருணை மதிப்பெண் என்ற வகையில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
தேர்வு முடிவுகள்
குறிப்பாக மாணவர்கள் யாராவது பார்டரில் பாஸ் ஆக முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டால், மேற்குறிப்பிட்ட 5 மதிப்பெண்கள் பெரிதும் உதவிகரமாக இருக்கும். தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்ல பயன்படும் என்று சொல்லப்படுகிறது.
வரும் மே 17ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. முன்னதாக 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறாக கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கி அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.