சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தலைவர்கள், அமைச்சர்கள், திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கிடையே இந்த சொத்து பட்டியல் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்கவிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அப்போதே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீதும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வருமான வரி செலுத்துவதில் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான தமிழ்நாட்டில் சென்னையில் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, திருச்சி, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில், பெங்களூர், மைசூர், பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர் சட்டசபை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.