கோவை: திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை என்றும், சர்வதேச நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “திருமண நிகழ்வு உட்பட எந்தவொரு நிகழ்வுக்கும் ஒருபோதும் தமிழ்நாடு அரசு மதுபானம் பரிமாற அனுமதியை வழங்காது. கிரிக்கெட் போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பிற சர்வதேச நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இருப்பது போல அனுமதி வழங்கப்படும். இது கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதி” என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாகவும், அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் எனவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் வெளியானது.
மதுபானம் பரிமாற ஆண்டு மற்றும் நாள் அடிப்படையிலான அனுமதிக்கான கட்டணமும் வெளியிடப்பட்டது. மாவாட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் தெரிவித்துள்ளது. பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என இதற்கான அனுமதி கட்டணங்கள் மாறுபடுகின்றன. நாள் ஒன்றுக்கு நகராட்சி என்றால் ரூ.11,000. பேரூராட்சி என்றால் ரூ.7,500. மற்ற இடங்கள் என்றால் ரூ.5,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, “திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், அந்த அரசாணை திரும்பப் பெறப்படும் வரை மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். | விரிவாக வாசிக்க > “விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்களில் மதுபானம் பரிமாற அனுமதித்தால்…” – தமிழக அரசுக்கு பாமக எச்சரிக்கை
அதேவேளையில், “மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். | வாசிக்க > “திமுகவினரின் மது ஆலை வருமானத்தைப் பெருக்கவே புதிய அரசாணை” – அண்ணாமலை விமர்சனம்