ஐதராபாத்,
புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ள அணிகள் மோதும் ஆட்டம் இதுவாகும். முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் கடைசி இரு ஆட்டங்களில் மும்பை, சென்னையிடம் வீழ்ந்ததும் அடங்கும்.
முந்தைய சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 134 ரன்னில் முடங்கிப்போனது. மீண்டும் எழுச்சிபெறும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் ஐதராபாத் அணிக்கு சொந்த ஊரில் விளையாடுவதால் உள்ளூர் சூழல் அனுகூலமாக இருக்கும். அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நிலையானதாக இல்லை. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஹாரி புரூக் அடுத்த இரு ஆட்டங்களில் சோபிக்கவில்லை.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சும் அப்படி தான் உள்ளது. 6 ஆட்டத்தில் 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம் ஒருங்கிணைந்து விளையாடினால் ஐதராபாத் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக உதை வாங்கிய டெல்லி கேப்பிட்டல் அணி ஒரு வழியாக கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது. அதுவும் 128 ரன் இலக்கை கடைசி ஓவரில் தான் எட்டிப்பிடித்தது. அந்த அணியில் கேப்டன் டேவிட் வார்னர் (4 அரைசதத்துடன் 285 ரன்), அக்ஷர் பட்டேல் (148 ரன் மற்றும் 4 விக்கெட்) தவிர மற்றவர்களின் செயல்பாடு மெச்சும்படி இல்லை.
தொடர்ந்து தடுமாறும் பிரித்வி ஷா, ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் மார்ஷ், லலித்யாதவ் ஆகியோர் பார்முக்கு திரும்பினால் இன்னும் வலுபெறும். நடப்பு தொடரில் அந்த அணி 20 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இன்னும் சரியான லெவன் அணி அமையவில்லை. இப்போதைக்கு கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.
(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா)