நாகை: போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பூட்ஸ் காலால் போலீஸ் எஸ்ஐ உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாடு எல்லையான நாகப்பட்டினத்தை எடுத்துள்ள நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் மது கடத்தலைத் தடுக்க அங்குள்ள போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி அங்கே இரு சக்கர வாகனங்கள் மூலம் மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க திருமருகல் சாலையில் பல்வேறு இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலை தடுப்புகள்: இதன் காரணமாக அங்கே நான்கு சாலைகளில் இரண்டு சாலைகள் ஒருவழிப் பாதையாகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மது கடத்தலைக் குறைக்க முடிந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இது டூவிலருக்கு சரியாக இருந்தாலும், அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த தடுப்புகளால் கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் வந்த இரண்டு அரசு பேருந்துகள் நீண்ட நேரம் பயணிகளுடன் காத்திருக்க வேண்டிய சூழலும் கூட ஏற்பட்டது. இதை அறிந்த அங்குள்ள உள்ளூர் மக்களும் சமூக ஆர்வலர்களும் அரசு பேருந்துகள் எளிமையாகச் செல்லும் வகையில் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
பூட்ஸ் காலால் உதை: பேருந்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக வாக்குவாதம் எழுந்த பிறகே, தடுப்புகள் அகற்றப்பட்டு பஸ்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன், நாகூர் போலீஸ் உதவி ஆய்வாளர் பழனிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அங்கே போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் அந்த நபரைக் கடுமையாகத் தாக்கி ஒருமையில் பேசினார்.
அத்துடன் நிற்காமல், அந்த நபரைச் சட்டை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மேலும், தனது பூட்ஸ் காலால் அந்த நபரின் முகத்திலும் உதைத்துத் தாக்கியுள்ளனர். அருகே அத்தனை பேர் இருந்தும் கூட பழனிவேல் இப்படி பூட்ஸ் காலால் தாக்கியுள்ளார். இதை அங்குள்ள சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும், வாகனத்தில் ஏறிய பிறகும் சக காவலர்கள் அந்த நபரைத் தாக்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அரசு பேருந்துகள் எளிமையாகச் செல்ல தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திய நபரின் முகத்திலேயே காவலர் பூட்ஸ் காலால் உதைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. போலீசாரின் இந்த நடவடிக்கையைப் பலரும் கடுமையாகச் சாடினர்.
நடவடிக்கை: இந்தச் சூழலில், நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டவரை பூட்ஸ் காலால் உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி நாகை மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், பூட்ஸ் காலால் உதைத்த போலீசுக்கு இந்த தண்டனை பத்தாது என்றும் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.