ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று (23) டீன்ஸ் வீதிச் சந்தியில் இடம்பெற்றன.
இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றதோடு, புத்தாண்டு அழகியாக தெரிவுசெய்யப்பட்ட ஹஷினி சமுதிகா, இரண்டாம் இடத்தைப் பெற்ற செனுகி ரதீஷா, மூன்றாம் இடத்தைப்பெற்ற லக்ஷிகா இஷாரா ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து சைக்கிளோட்டப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஸ்ரீ தர்மாலோக தயா மகா விகாரைக்கு அருகில் கித்சிறி ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிக்கான காணியை அன்பளிப்புச் செய்த மொஹமட் ஸ்மையிலுக்கு 50 இலட்சும் ரூபாய் பெறுமதியான வீடொன்றும் 30 இலட்சம் ரூபா, பெறுமதியான கடையொன்றின் உரிமமும் 05 இலட்சம் ரூபா பணமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிமேஷ் ஹேரத்தும் கலந்துகொண்டிருந்தார்.
நாட்டுக்குள் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்திய மாசற்ற தலைவர் என்ற வகையில் “ஜனதா பிரசாதாபிமானி” விருது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கித்சிறி ராஜபக்ஷவினால் வழங்கிவைக்கப்பட்டது.
புத்தாண்டு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த ஜனாதிபதியவர்களுடன் சுமூகமாக கலந்தாலோசித்த அவர், பல வருடங்களின் பின்னர் தமிழ் சிங்கள புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சந்தர்ப்பத்தை மக்களுக்கு உருவாக்கித் தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
கொழும்பின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்த ஆகியோருடன் அரசியல் பிரமுகர்களும் வர்த்தகர்கள் உள்ளடங்களாக பெருமளவானோர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.