ரேவா: கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் தினத்ததை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, ”2014க்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் கிராமப்புற வளர்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால், 2014க்குப் பிறகு கிராமப்புறங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
முந்தைய அரசுகள் கிராமப்புறங்களுக்குச் செலவிடுவதை தவிர்த்தன. இதன் காரணமாக கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கிராமப்புறங்களில் வளர்ச்சித் திட்டங்கள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் 6 ஆயிரம் பஞ்சாயத்து அலுவலகங்கள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் 30 ஆயிரம் பஞ்சாயத்து அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் 70 கிராம பஞ்சாத்துக்களுக்கும் குறைவாகவே இணைய வசதிக்கான ஆப்டிக்கல் ஃபைபர் வசதி அளிக்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் ஆப்டிக்கல் ஃபைபர் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 2014க்கு முன் கிராம பஞ்சாயத்துக்களுக்கான நிதி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில் ரூ.70 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், அது தற்போது ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது” என பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில், ரூ.2,300 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.