சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக மாநிலம் புலிகேசிநகர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (ஏப்.24) திங்கட்கிழமை, பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர் D.அன்பரசனை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான D.அன்பரசன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் மே 10-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஆலோசனை நடத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தனி தொகுதியில் அதிமுக சார்பில் அவைத் தலைவர் அன்பரசன் வேட்பாளராக அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.