திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தண்டவாளத்தில் படுத்து தூங்கிய மூன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உப்பூர் என்ற ஊரில் நடைபெற்ற மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி, காவடி எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், உள்ளூரை சேர்ந்த 17 வயதான அருள்முருகதாஸ் மற்றும் பரத் , நாகையை சேர்ந்த 24 வயதான முருகபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், அவர்கள் அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தூங்கினர்.
அப்போது அதிகாலை 3 மணியளவில் அவ்வழியாக தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் வந்தது. ஆனால், ரயில் சத்தம் கேட்காமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில், அருள்முருகதாஸ் மற்றும் முருகபாண்டியன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த பரத், ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in