சிவகார்த்திகேயன் கடைசியாக அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். அவர் இதற்கு முன்னதாக நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் பெரும் அப்செட் ஆனதாக கூறப்பட்டது.
மாவீரனில் நடிக்கும் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் படம் கொடுத்த அடிக்கு அடுத்ததாக மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயகக்த்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும் என கருதப்படுகிறது.
அயலான் சிவகாரத்த்கேயன்: இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
வெளியான அயலான் அப்டேட்: இந்தச் சூழலில் அயலான் படத்தின் தாமதம் குறித்து நேற்று பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. அதில், அயலான் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை சமரசம் செய்துகொள்ளாமல் உருவாக்கவே இந்த தாமதம். பான் இந்திய படங்களுக்கு நிகரான கிராஃபிக்ஸ் காட்சிகள் அயலான் படத்தில் உள்ளது.
இந்தப் படத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அயலானில் வரும் வேற்றுகிரகவாசி கேரக்டர் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக 4500 VFX காட்சிகளைக்கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தீபாவளிக்கு படம் ரிலீஸ்: இப்போது க்ளிம்ப்ஸ் ரிலீஸ்: இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயலான் படமானது தீபாவளிக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் படத்தின் க்ளிம்பஸ் காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. 28 நொடிகள் ஓடக்கூடிய அந்த க்ளிம்ப்ஸில் ஏலியன் ஒன்று இறங்கி வருவது போன்ற காட்சியும், சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் காட்சியும் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.