திருச்சி : கேரளாவில் இருந்து காரில் கடத்தி வந்த 84 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீஸார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் சொகுசு கார் ஒன்று வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக மொத்தம் 84 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் போலீஸார் பணத்துடன் அந்தக் காரை பறிமுதல் செய்து காரில் வந்த மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், காரில் பணம் கொண்டு வந்தவர்கள் கோயம்புத்தூர் கே.கே. புதூரை சேர்ந்த பார்த்தசாரதி, கணவாய் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சதீஷ், வையம்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது.
மேலும், போலீஸாரால் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் கள்ள நோட்டு என்பதும், தமிழகத்தில் புழக்கத்தில் விடுவதற்காக கேரளாவை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் கேரளாவை சேர்ந்த அந்த தயாரிப்பாளரின் பின்னணி மற்றும் பல்வேறு விவரங்களையும் சேகரித்து அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.