திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் ஜெருசலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 5 பேரை காணவில்லை என அங்குள்ள ஜெருசலம் நகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் தேதி, கள்ளிக்குளம், திசையன்விளை, உவரி, இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 47 பேர் நாகர்கோயிலில் உள்ள டிராவல் ஏஜென்சி மூலம் கள்ளிக்குளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி என்பவர் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலா முடித்துவிட்டு ஊர்திரும்ப தயாரான போது உவரி பகுதியைச் சேர்ந்த ஜோயல், ரதி, சரோஜா உள்ளிட்ட ஐந்து பேர் காணாமல் போனதாகவும் இது குறித்து , ஜெரால்டு ரவி ஜெருசலம் நகர காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐந்து பேரும் அங்கிருந்து லெபான் நாட்டிற்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரித்து வரும் நிலையில், மீதமுள்ள 42 பேரையும் நாளை இரவு இந்தியாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க ஜெருசலேம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.