தூத்துக்குடி : மதுபோதையில் நண்பன் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொன்ற வாலிபர்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் சப்பாணிமுத்து. சலவைத் தொழிலாளியாக இருந்து வரும் இவரும் மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரும் அடிக்கடி சேர்ந்து குடித்துவிட்டு, சலவைத் தொழிலாளர்கள் கூடத்தில் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இருவரும் வழக்கம் போல் நேற்று குடித்துவிட்டு சலவைத் தொழிலாளர்கள் கூடத்தில் படுத்துள்ளனர். அப்போது, திடீரென சப்பாணிமுத்துவுக்கும், மாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அயர்ந்து தூங்கிவிட்டனர்.
திடீரென நடு ராத்திரியில் விழித்து கொண்ட மாரியப்பனுக்கு இந்த தகராறு நினைவில் வந்தது. அந்த நேரத்தில் சப்பாணிமுத்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மாரியப்பன், கல்லைத் தூக்கி சப்பாணி முத்துவின் தலையில் போட்டுள்ளார். இதனால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சப்பாணி முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாறியப்பனைக் கைது செய்தனர்.
அதன் பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், “சப்பாணிமுத்து போதையில் என் அம்மாவைத் தவறாகப் பேசினார். அதில் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டேன்” என்பதுத் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.