வினாத்தாள் கசிந்த விவகாரம்: போலீஸைத் தாக்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா… தெலங்கானாவில் நடப்பது என்ன?

சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் தெலங்கானாவில், மார்ச் 5-ம் தேதியன்று தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TSPSC) நடத்தவிருந்த போட்டித் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதைத் தொடர்ந்து மார்ச் 5-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு உட்பட சில தேர்வுகளை TSPSC ரத்துசெய்தது. இந்த விவகாரத்தைச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) விசாரித்து வருகிறது.

சந்திரசேகர ராவ் – ஒய்.எஸ்.ஷர்மிளா

மார்ச் 13 முதல் இதுவரை மட்டும் TSPSC ஊழியர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதே சமயம் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பலவும் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திவருகின்றன. குறிப்பாக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வரின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வரைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்துக்குச் செல்ல முயன்ற ஷர்மிளா, தன்னை இடைமறித்த போலீஸாரைத் தாக்கிய சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தச் சம்பவத்தின்போது ஷர்மிளா, பெண் காவலரைக் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, போலீஸாரைத் தாக்கிய காரணத்துக்காக ஷர்மிளா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போலீஸாரை ஷர்மிளா தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரியொருவர், “அவர் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதற்கு அனுமதி இல்லை. போலீஸார் அவரைத் தடுக்க முயன்றபோது, அவர் தவறாக நடந்துகொண்டார்” எனக் கூறினார்.

அதே சமயம் இது குறித்து ஒய்.எஸ்.ஷர்மிளா, போலீஸார் தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், தற்காப்புக்காகச் செயல்படுவது தன்னுடைய கடமை என்றும் கூறியிருக்கிறார்.

தற்போது போலீஸ் காவலில் இருக்கும் ஷர்மிளாவை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஷர்மிளாவைப் பார்க்க வந்த அவரின் தாயார் ஒய்.எஸ்.விஜயம்மாவும் போலீஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.