வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகின் மிகப்பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்டு, தன்னுடைய தொழில் சாம்ராஜ்ஜியத்துக்கு, அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பதில் ஒரு புதுமையான வழியை கையாண்டு வருகிறார்.
இவர், தன்னுடைய நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் என ஐவரையும், மாதம் ஒரு முறை, எல்.வி.எம்.எச்., எனும் தன் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள உணவு சாப்பிடும் அறையில் சந்தித்து பேசி வருகிறார்.
கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த சந்திப்பில், தொழில் சம்பந்தமான புதிய யுக்திகள் மற்றும் தொழிலை மேலும் எவ்வாறு அபிவிருத்தி செய்வது போன்றவை குறித்த ஆலோசனைகளை அவர்களிடம் அர்னால்டு மேற்கொள்கிறார்.
சந்திப்பின் முக்கிய நோக்கம், தொழில் சாம்ராஜ்யத்திற்கு அடுத்த வாரிசு யார் என்பது குறித்து முடிவெடுப்பதற்கானதாகும். மேலும், இந்த தேர்வு முற்றிலும் தகுதியின் அடிப்படையில் இருக்கும் என்றும், அறிவிக்கப்படும் வரை, அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
![]() |
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு, ‘புளூம்பர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தகவலின் படி, 212 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது, கிட்டத்தட்ட 17.38 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவருக்கு முன் முதலிடத்தில் இருந்து வந்த எலான் மஸ்க், தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.
உலகின் பல்வேறு ஆடம்பர பிராண்டுகள் அர்னால்டின் எல்.வி.எம்.எச்., வசம் உள்ளன. அர்னால்டு, தன் வாரிசுகளை ஏற்கனவே இந்நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி, செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement