சென்னை: கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என்று தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. பின்னர் திருமண மண்டபத்தில் அதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்துதிமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை மூடப் போவதாக அறிவித்துக் கொண்டே, மறுபக்கம் மதுபான விற்பனையையும் விநியோகத்தையும் அதிகரிப்பது பொருத்தமற்றது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெறவிட்டால், மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பலகட்ட போராட்டங்களை எனது தலைமையில் பாமக முன்னெடுக்கும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: முழு மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி தமிழகம் பயணிக்க வேண்டுமென நாம் கூறி வரும் நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழகம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் கடைகளால் லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதிப்பது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தேர்தல் பரப்புரையின்போது திமுக அளித்த வாக்குறுதிக்கு மாறாக, மது பழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை திமுக அரசுமேற்கொண்டுள்ளதா. அரசாணையை திரும்பப்பெறாவிட்டால், மக்களைத் திரட்டி அமமுக போராட்டத்தில் ஈடுபடும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஏதாவது ஒரு வழியில் மக்களை மதுவுக்கு அடிமையாக்க தமிழக அரசு நினைக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில், மதுவிலக்குக்கு என் முதல் கையெழுத்து என்று வாக்குறுதி கொடுத்த திமுக அரசு, இன்று அவற்றை செயலாக்காமல் வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திருமண மண்டபங்களில் மதுவிற்பனை என்று அறிவித்துவிட்டு, தற்போது எதிர்ப்பு ஏற்பட்டவுடன் அமைச்சர் ஒருவர் அதனை மறுப்பது திமுகவின் வழக்கமான ஏமாற்று தந்திரமே. தமிழகத்தை சீரழிக்கும் முடிவை திமுக அரசு திரும்பப்பெறுவதோடு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் க.கிருஷ்ணசாமி: ஊருக்குள் பார் வைப்பதும், பாருக்குள் ஊரை வைப்பதும் இரண்டுமே ஆபத்தானவை. எனவே, திருமணமண்டபங்களிலும் மது விருந்து அனுமதி அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
வி.கே.சசிகலா: திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது தமிழக மக்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது.