Motivation Story: அம்மா, அப்பா, ரயில், கராத்தே, CSK… – ரஹானே ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!

`உங்கள் எதிராளிக்கு மரியாதை தருவதுதான் எப்போதும் முக்கியமானது.’ – அஜிங்க்யா ரஹானே

கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானம். இரண்டு நாள்களுக்கு முன்பு (23-04-2023) கொல்கத்தாவில் ஐபிஎல் லீக் போட்டி. சி.எஸ்.கே-வும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதிக்கொண்டன. அந்த ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது சி.எஸ்.கே. அந்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவர்களில் முக்கியமானவர் அஜிங்க்யா ரஹானே. மனிதர் அந்தப் போட்டியில் எடுத்த ரன்கள் 71 (இதில் ஆறு பவுண்டரிகளும், ஐந்து சிக்ஸர்களும் அடங்கும்). ஆனால், அது குறித்து எந்தப் பெருமிதமும் அவருக்கு இல்லை. `என் சிறந்த ஆட்டம் இனிமேல்தான் வரும் என்று நான் நினைக்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். அந்த அடக்கம், அந்தப் பெருமைப்பட்டுக்கொள்ளாத குணம், அந்தத் தன்னம்பிக்கை, அந்தப் பொறுமை… அதுதான் ரஹானே.

நவம்பர் 16, 2013. மும்பையில் இருக்கும் வாங்கடே மைதானம். சச்சின் டெண்டுல்கருக்கு அது 200-வது டெஸ்ட் போட்டி. அதுமட்டுமல்ல, அன்றுதான் அவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். நிறைவும் நெகிழ்ச்சியுமான அந்த தினத்தில், மைதானத்தில் இருக்கும் ஒரு தனியறையில் அமர்ந்திருந்தார் டெண்டுல்கர். யாரையோ அழைத்தார். “ரஹானேயைக் கூட்டிட்டு வர முடியுமா?’’ என்று கேட்டார்.

Ajinkya Rahane

சில நிமிடங்களில் டெண்டுல்கருக்கு முன்னால் வந்து நின்றார் ரஹானே. ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் ரஹானேயைப் பார்த்துக்கொண்டிருந்தார் டெண்டுல்கர். பிறகு சொன்னார்… “நீ அதை கவனிச்சிருக்க வாய்ப்பில்லை. ஆனா, உன்னை நான் ரொம்ப நேரமா வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன். உன்னுடைய மனப்பான்மை, நீ நடந்துக்கறது, நீ மத்த விளையாட்டு வீரர்களுக்கு டிரிங்க்ஸ் எடுத்துக் கொடுக்குறவிதம், பொறுமையா பெஞ்ச்ல உட்கார்ந்திருக்குறது எல்லாமே பாராட்டப்பட வேண்டியது. இப்படி விளையாட்டுல கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கையும், ஹார்டுவொர்க்கையும் என்னிக்கும் விட்டுடாதே. அதுதான் உன்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. அது இன்னும் உன்னை உயரத்துக்குக் கொண்டு போகும்.’’ வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெண்டுல்கர் விளையாடிய அந்தக் கடைசி ஆட்டத்தில், இந்திய அணியில் ரஹானேவும் இடம்பிடித்திருந்தார்… 12-வது வீரராக (12-th Man).

`களத்தில் இறங்கி பேட்டைப் பிடிக்கும்போது நான்தான் எனக்கு பாஸ்.’ – அஜிங்க்யா ரஹானே

ரஹானேயின் பொறுமைதான் அவருக்குரிய இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. இன்று இந்திய அணியில் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர். ஒரு புள்ளிவிவரப்படி, சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அதே ஆண்டு டெஸ்ட் போட்டிகளில், அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்களில் ரஹானே எடுத்த ரன்கள் 670. அதற்கு அடுத்த இடத்தில்தான் விராட் கோலியே இருந்தார். கோலி எடுத்திருந்த ரன்கள் 620.

மகாராஷ்டிராவிலிருக்கும் அஷ்வி குர்த் (Ashwi Khurd) என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் 1988-ம் ஆண்டு பிறந்தவர் ரஹானே. ரஹானேவுக்கு ஒரு தம்பியும் தங்கையும் உண்டு. நடுத்தரக் குடும்பம். ஆனால், தங்கள் மகனின் ஆசைக்கும் லட்சியத்துக்கும் தடை போடாத பெற்றோர். ரஹானேவின் கிரிக்கெட் பயணம் டோம்பிவ்லி (Dombivli) நகரிலிருந்துதான் ஆரம்பித்தது. அதிகாலை 4 மணிக்கு எழுந்துகொள்வார். மும்பையிலிருக்கும் ஆஸாத் மைதானத்தில் நெட் பிராக்டீஸ். டோம்பிவ்லியிலிருந்து மும்பைக்கு ரயிலில் தினமும் பயணம்.

Ajinkya Rahane

ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார் ரஹானே… “நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம் என் பெற்றோர். அவர்களைப் பொறுத்தவரை நான் அதே சின்னஞ்சிறு பையன். அதே அஜிங்க்யா ரஹானே. என் குடும்பம் எனக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறது. அதனால்தான் என் குடும்பத்தினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் கனவு கண்டேன். கிரிக்கெட் பயிற்சிக்காக ஏழு வயதிலிருந்தே என் ரயில் பயணங்கள் தொடங்கிவிட்டன. ஒருநாள் அப்பாவுடன், நாங்கள் இருக்கும் டோம்பிவ்லி நகரிலிருந்து மும்பையிலிருக்கும் சி.எஸ்.டி (சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்) ஸ்டேஷனுக்குப் போனோம். அப்பா என்னை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். தன் வேலைக்குக் கிளம்பிவிட்டார்.

Rahane

அடுத்த நாள் என் அப்பா டோம்பிவ்லி ஸ்டேஷனுக்கு வந்தார். `இனிமே நீதான் தனியா போய்க்கணும். என்னால துணைக்கு வர முடியாது’ என்று சொல்லி ரயிலில் ஏற்றிவிட்டார். கொஞ்சம் கலக்கமாக இருந்தாலும், நான் தனியாக ரயிலில் ஏறினேன். தன்னந்தனியனாக சி.எஸ்.டி ஸ்டேஷனில் வந்து இறங்கினேன். ஆனால், என் அப்பா எனக்குப் பின்னாலிருந்த ரயிலின் அடுத்த கம்பார்ட்மென்ட்டில் நான் தனியாக பயமில்லாமல் பயணம் செய்கிறேனா என்று தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்திருந்தார். அதைப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். அவருக்கு என்மீது நம்பிக்கை வந்த பிறகு என்னைப் பின்தொடர்வதை விட்டுவிட்டார்.’’

`ஒரு கிரிக்கெட் வீரராக, நீங்கள் பேட்டிங் பண்ணவில்லையென்றாலும்கூட அதற்கான பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம். அதை ஒரு பழக்கமாகவே கடைப்பிடிக்கவேண்டியது ரொம்ப முக்கியம்.’ – அஜிங்க்யா ரஹானே

`வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்’ என்பார்கள். ரஹானேயின் கிரிக்கெட் வரலாற்றில் அவர் அடைந்த வெற்றிகளைப்போலவே சில சறுக்கல்களும் உண்டு. ஆனாலும், அவர் தோல்விகளைப் பொருட்படுத்துவதில்லை. அடுத்த ஆட்டம்… அடுத்த ஆட்டம் என்று ஓடிக்கொண்டேயிருக்கிறார். கிரிக்கெட்டில் நிலைத்து நிற்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார். அதற்கு அவரின் குடும்பமும் உறுதுணையாக இருந்ததுதான் காரணம். “என் பெற்றோர் என்னை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்துப் போவார்கள். ஆனால் ஒருபோதும் என் விளையாட்டில் குறுக்கிட்டதில்லை. என்னுடைய விளையாட்டைப் பற்றி ஒருபோதும் கேள்வி கேட்டதில்லை’’ என்று குறிப்பிடுகிறார் ரஹானே.

#Rahane

ரஹானே சிறுவனாக இருந்தபோது, அவருடைய அம்மா சுஜாதா ரஹானேதான் அவரை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்துப்போவார். பயிற்சி மைதானம் இருந்தது சில கிலோமீட்டர் தூரத்தில். அவ்வளவு தூரம் ஆட்டோவில் போவதற்குக்கூட காசிருக்காது. கிரிக்கெட் கிட் பேக்கைத் தூக்குவதற்கு சிறுவன் ரஹானேவால் முடியாது. அவருடைய அம்மா ஒரு கையில் பேக்கைத் தூக்கிக்கொள்வார். இன்னொரு கையில் ரஹானேவின் தம்பி சஷாங்க்கைத் தூக்கிக்கொள்வார். கொளுத்தும் வெயிலோ, மழையோ நடந்தே போவார்கள். மூன்று மணி நேர பயிற்சி முடியும் வரை அம்மா மைதானத்துக்கு வெளியே காத்திருப்பார். பயிற்சி முடிந்ததும், திரும்ப வீட்டுக்கு நடை.

`நான் போகும் வழியில் நிறைய சவால்கள் காத்திருந்தன. ஆனால், எனக்கு அவற்றை எதிர்கொள்வது பிடித்திருந்தது.’ அஜிங்க்யா ரஹானே

சிறு வயதில் கூச்ச சுபாவமும், பயமும் கொண்டவராக இருந்தார் ரஹானே. அவற்றைப் போக்குவதற்காகவே ரஹானேவின் அப்பா, அவரை கராத்தே கிளாஸில் சேர்த்துவிட்டார். அவர் பயிற்சி செய்த ட்ரெயினிங் சென்டரில் மிக இளம் வயதில் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவர், ரஹானேதான். அப்போது அவருக்கு வயது 12. பல ஆண்டுகளுக்கு கராத்தே பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தார் ரஹானே. மன இறுக்கத்தைப் போக்குவதற்கும், எப்போதும் இயல்பாக இருக்கவும், அவருடைய ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்ளவும் கராத்தே உதவியது என்று அவரே குறிப்பிடுகிறார். கராத்தே அவருடைய ஆளுமைத்திறனை அவருக்கே அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. கராத்தே தேர்வுகளின்போது ஒருமுறை ஐம்பது செங்கற்களைக் கையால் உடைத்திருந்தார். மற்றொரு முறை தலையால் 15 டைல்ஸ்களை முட்டி மோதி உடைத்திருந்தார். இருபது கரும்புகள்கொண்ட கரும்புக்கட்டை ஒரே அடியில் உடைத்திருக்கிறார்.

Ajinkya Rahane

ரஹானேவின் வாழ்க்கைப் பாடம் நமக்கு உணர்த்துவது அபாரமான சேதி. வாய்ப்பு வரும்வரை எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டுமோ, அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும். வந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எத்தனை போட்டிகளில் அவர் விளையாடியிருக்கிறார், அவருடைய கிரிக்கெட் வரலாற்று சாதனைகள் என்னென்ன என்பதெல்லாம் அவருடைய ரசிகர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் எல்லோருமே அடுத்து அவர் என்ன சாதனையை நிகழ்த்தப்போகிறார் என்று காத்திருக்கிறார்கள்.

அதற்கு ஏற்றாற்போல்தான், கொஞ்சம்கூட பந்தா இல்லாமல் சமீபத்தில் “என் சிறந்த ஆட்டம் இனிமேல்தான் வரும் என்று நான் நினைக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் ரஹானே. அந்த நாளுக்காகக் காத்திருப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.