புதுடெல்லி: தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் பார் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பல்வேறு மாநிலங்களின் பார் கவுன்சில் நிர்வாகிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் பல்வேறு மதம், கலாச்சாரத்தை பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர். நாட்டின் அடிப்படை சமூக கட்டமைப்பு தொடர்பான விவகாரங்கள் நாடாளுமன்றத்தில்தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் தன்பாலின திருமண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதுதான் நல்லது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுப்பது எதிர்மறையாக அமையக்கூடும். நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதிக்கக்கூடும்.
நாட்டின் 99.9 சதவீத மக்கள் தன்பாலின திருமணத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே, தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதே சிறந்ததாக இருக்கும்.
இவ்வாறு பார் கவுன்சில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண் எம்பி கண்டனம்
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா கூறும்போது, ‘‘பார் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் தலையிட எவ்வித உரிமையும் கிடையாது. இந்திய மக்கள் தொகையில் 49 சதவீதம் பேர் பெண்கள். தன்பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு யாரும் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.