சென்னை: திருமண கூடங்களில் மதுபானம் பரிமாறும் வகையிலான தமிழக அரசின் அறிவிக்கை நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், ஹோட்டல்கள், அதை சார்ந்த பார்கள் ஆகியவற்றுக்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் தற்போது எஃப்.எல்.12 என்ற புதிய உரிமத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக மதுவிலக்குத் துறை சார்பில், கடந்த மார்ச் 18-ம் தேதி உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசிதழில் கூறியிருப்பதாவது: இந்த எஃப்.எல்.2 சிறப்பு உரிமமானது, மதுபானங்களை இருப்பு வைத்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் மாநாடுகள், நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கொண்டாட்டங்கள், திருவிழாக்களில், விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பரிமாறுவதற்காக வழங்கப்படுகிறது.மாவட்ட ஆட்சியரின்முன் அனுமதி பெற்று, ஆயத்தீர்வைத் துறை உதவி ஆணையர், துணை ஆணையர்களால் வழங்கப்படும் இந்த உரிமம் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும்.
உரிய தொகை செலுத்தி உரிமம் பெற்று, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது ஆகியவற்றை, உரிமத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் பரிமாறலாம்.
அதன்படி, வர்த்தகப் பகுதிகளான, கருத்தரங்க அரங்கம், மாநாட்டுக் கூடங்கள், திருமண அரங்கங்கள், விருந்து அரங்கம்ஆகியவற்றில் மதுபானங்களை இருப்பு வைத்து விநியோகிக்கலாம். இந்த உரிமத்தைப் பொறுத்தவரை, ஆண்டு பதிவுக் கட்டணமாக மாநகராட்சிப் பகுதி என்றால் ரூ.1 லட்சம், நகராட்சியில் ரூ.75 ஆயிரம், இதர பகுதிகளில் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். ஒரு நாள் உரிமம் வழங்குவதற்கான கட்டணமாக மாநகராட்சியில் ரூ.11 ஆயிரம், நகராட்சியில் ரூ.7,500 மற்றும் இதர பகுதிகளில் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
அதேபோல, வர்த்தகப் பகுதி இல்லாத வளாகங்களில், குடும்ப விழாக்கள், நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுக்கு, மாநகராட்சியாக இருந்தால் ரூ.11 ஆயிரம், நகராட்சியில் ரூ.7,500 மற்றும் இதர பகுதிகளில் ரூ.5 ஆயிரம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.
நிகழ்ச்சி நடத்த உரிமம் பெறுவதற்கு முன், மாநகராட்சியாக இருந்தால் காவல் ஆணையரிடமும், மாவட்டமாக இருந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் தடையின்மைச் சான்றுபெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதுதவிர, குறிப்பிடப்பட்ட அளவைவிட கூடுதலான மது விநியோகிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இ்ந்நிலையில், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாறுவதற்கான குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்தனர். இ்ந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி,‘‘சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது, அனுமதி கேட்டு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அந்தஇடத்துக்கு மட்டும் மது பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. திருமண மண்டபங்கள் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளில் அதுபோன்ற அனுமதி வழங்கப்பட மாட்டாது. திருமண நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்கள், இதர நிகழ்ச்சிகளில் ஒருபோதும் மது பயன்படுத்த அரசு அனுமதிக்காது’’ என்றார்.
இந்நிலையில் நேற்று மாலை தமிழக அரசு, ஆட்சேபத்துக்குரிய பகுதிகளை நீக்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அதே போல், தமிழகத்திலும் வழங்க கடந்த மார்ச் 18-ம் தேதி அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துகளை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் உள்ள மாநாட்டு மையங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, இதுகுறித்து முந்தைய அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறை இந்த அறிவிக்கையில் நீக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.