புதுடெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி 500 இந்தியர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தலைநகர் கார்த்தோமில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வன்முறைக்கு ஒரு இந்தியர் உட்பட சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, சூடானில் சிக்கியுள்ள சுமார் 3 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தது. இது தொடர்பாக அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 21-ம் தேதி உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சூடானில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சூடானில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ ரகத்தின் 2 விமானங்களும், சூடானின் முக்கிய துறைமுகத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமேதா கப்பலும் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில், இந்தியர்கள் உட்பட பல்வேறு நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 பேரை சூடானிலிருந்து விமானம் மூலம் மீட்டுள்ளதாக சவுதி அரேபியா நேற்று முன்தினம் தெரிவித்தது. மேலும் டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஞாயிற்றுக்கிழமை இரவு 5 இந்தியர்கள் உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்டுள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலம் சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கி உள்ளது. இதன்படி, 500 இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்தடைந்துள்ளனர். அவர்கள் அங்கு ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.- பிடிஐ