நீலகிரி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று கற்பழித்து கொன்ற கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவி. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு இறுதித்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், வழக்கம்போல் நேற்று காலை மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். பின்பு மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
ஆனால் மாணவி எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் சிறுமி ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை சேர்ந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது காணாமல்போன மாணவி என்பது தெரிய வந்தது.
மேலும் மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்பொழுது மாணவியின் உடல் அருகே கார் ஒன்று நின்றுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில் மாணவியை சிலர் காரில் கடத்தி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார், மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் மாணவியின் உடலை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவியை கடத்திச் சென்ற கார் கக்கோடுமந்து பகுதியை சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன்(25) என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர்தான் மாணவியை கடத்திச் சென்று கற்பழித்ததும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரஜ்னேஷ் குட்டனை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.