தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிரந்தர வீதிப் போக்குவரத்துக்கான அனுமதி பத்திரம் எதையும் வழங்கவில்லை என்று அதன் தலைவர் தனக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
தனியார் பஸ்களுக்கு 35 அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப் பத்திரங்கள் அரசியல் அதிகாரத்தில் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தாம் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதல், தனக்கோ அல்லது வேறு எந்த அரசியல் அதிகாரத்தினருக்கோ, எக்காரணம் கொண்டும் அனுமதிப் பத்திரங்களை வழங்க வேண்டாம் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பில் இதற்கு முன்னர் பல்வேறு ஊழல், மோசடி, முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும், எனவே இதற்கான முறையான மற்றும் வெளிப்படையான தேசிய வேலைத்திட்டம் இன்றி எவருக்கும் நிரந்தர வீதி அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என்று தான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
இந்த உத்தரவு அவ்வாறு இருக்கையில், அமைச்சரவைக்கும் முன்வைத்து, அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைகள் மற்றும் அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்பில் 30 நாட்களுக்குள் பொது ஊடகங்களில் விளம்பரம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.