வள்ளலார் முப்பெரும் விழா: அரசு மானியமாக ரூ.3.25 கோடி வழங்கிய முதல்வர்!

தமிழ்நாடு முதலமைச்சர்

இன்று (25.04.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்தினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் மானியமாக 3.25 கோடி ரூபாய்க்கான காசோலையை வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக்குழுவின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம் வழங்கினார்.

அகில இந்திய அரசியலில் ஈடுபடு போகிறோம் ஸ்டாலின் சூளுரை

2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி, திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் கொண்டாடிடும் வகையில் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 5.10.2022 அன்று நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவின் தொடக்க விழாவில் ‘வள்ளலார் – 200’ இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றும்போது, “வள்ளலாரின் முப்பெரும் விழா 52 வாரங்களுக்கு பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது, ஓராண்டிற்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்ட இந்த விழாவிற்கு 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று அறிவித்தார்.

அதன்படி, வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானம் செலவினத்திற்காக அரசு மானியமாக 3.25 கோடி ரூபாய்க்கான காசோலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக்குழுவின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களிடம் வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு தினந்தோறும் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.