கொச்சி வாட்டர் மெட்ரோ (Kochi Water Metro – KWM)… இந்தப் பெயர் இந்தியாவிற்கு புதிது. கேரளாவின் கனவு திட்டம் தற்போது நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது. இம்மாநிலத்தில் நீர்வழிப் போக்குவரத்து என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் சூழலில், வாட்டர் மெட்ரோ அதனை ஒருபடி மேலே கொண்டு சென்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 1,136.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கொச்சி வாட்டர் மெட்ரோ
கேரள அரசு, ஜெர்மனியை சேர்ந்த KFW நிறுவனம், பசுமை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வங்கிகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் நிறைவேறியுள்ளது. இதன் முதல்கட்ட திட்டத்தை இன்றைய தினம் (ஏப்ரல் 25) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கேரள உயர் நீதிமன்றம் முதல் வைபின் வரை, வைட்டிலா முதல் காக்கநாடு வரை என இரண்டு வழித் தடங்களில் வாட்டர் மெட்ரோ இயக்கப்படவுள்ளது.
கொச்சி வாட்டர் மெட்ரோ: இந்தியாவிலேயே இதுதான் ஃபர்ஸ்ட்… இதுல இவ்ளோ விஷயமிருக்கா?
குறைந்த கட்டணம்
உயர் நீதிமன்றத்தில் இருந்து வைபினிற்கு 20 நிமிடத்திலும், காக்கநாடு முதல் வைட்டிலாவிற்கு 25 நிமிடத்திலும் செல்ல முடியும். ட்ராபிக் பிரச்சினை இருக்காது. வியர்த்து விறுவிறுக்க வேண்டியதில்லை. கால தாமதம் ஆகாது. ஏசி வசதியுடன் சொகுசான பயணத்தை மேற்கொள்ளலாம். இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் என்பது 20 ரூபாய் மட்டுமே. தினசரி பயணிக்கும் நபர்கள் வாராந்திர, மாதாந்திர, மூன்று மாத பாஸ்களை வாங்கிக் கொள்ளலாம்.
கொச்சி ஒன் டிஜிட்டல் சேவை
இதன்மூலம் டிக்கெட் கட்டணம் மேலும் குறையும். கொச்சி ஒன் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையில் டிக்கெட்கள் பெற்று வாட்டர் மெட்ரோ சேவையை பெறலாம். இந்த கார்டுகள் கொச்சி மெட்ரோ ரயில், கொச்சி வாட்டர் மெட்ரோ என இரண்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். முழு வீச்சில் கொச்சி வாட்டர் மெட்ரோ பயன்பாட்டிற்கு வந்தால் 10 தீவுப் பகுதிகளை இணைக்கும் வகையில் 38 முனையங்கள் ஏற்படுத்தப்படும்.
படகின் சிறப்பம்சங்கள்
இதற்காக 78 வாட்டர் மெட்ரோ படகுகள் பயன்படுத்தப்படும். இந்த படகுகள் கொச்சின் படகு கட்டுமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. புதுமையான வடிவமைப்பில் மிகவும் குறைந்த எடையும், அலுமினிய உலோகத்தின் உதவியுடன், FRP சூப்பர் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் லித்தியம் டைட்டானைட் ஆக்சைடு பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவை நீடித்து உழைக்கக் கூடியவை. விரைவாக சார்ஜ் ஏற்ற முடியும். வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு மிகவும் பாதுகாப்பானது. இந்த படகுகளில் நவீன திசைகாட்டும் இயந்திரங்கள், தகவல் தொடர்பு கருவிகள், கண்காணிப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
வாழ்வாதாரம் மேம்படும்
கடந்த பிரான்ஸில் நடந்த நிகழ்வில் கொச்சி வாட்டர் மெட்ரோவிற்கு மிகவும் புகழ்பெற்ற Gussies Award விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த வாட்டர் மெட்ரோ சேவையால் கொச்சியை சுற்றியுள்ள 10 தீவுப் பகுதிகளை சேர்ந்த மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் என அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.