ஆபரேஷன் காவிரி | சூடானில் இருந்து 278 இந்தியர்களுடன் புறப்பட்டது ஐஎன்எஸ் சுமேதா கப்பல்

கார்த்தும்: உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 278 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது ட்விட்டர் பக்கத்தின் தெரிவித்துள்ளார். அதில் அவர் மீட்கப்பட்ட இந்தியர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

“ஆபரேஷன் காவிரி மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் அடங்கிய முதல் குழு சூடான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இந்தக் குழுவானது ஐஎன்எஸ் சுமேதா கப்பலின் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தலைநகர் கார்த்தோமில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வன்முறைக்கு ஒரு இந்தியர் உட்பட சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, சூடானில் சிக்கியுள்ள சுமார் 3 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 21-ம் தேதி உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சூடானில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சூடானில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ ரகத்தின் 2 விமானங்களும், சூடானின் முக்கிய துறைமுகத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமேதா கப்பலும் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.

இந்நிலையில், துறைமுகத்திற்கு 500 இந்தியர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், முதல் ஐஎன்எஸ் சுமேதா கப்பலில் அனுமதிக்கப்பட்ட முதல் குழுவில் 278 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.