சென்னை: மக்களைத் தேடி மேயர் திட்டம் வரும் மே 3-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. வட சென்னை பகுதியில் மக்களிடம் மனுக்களை பெறுகிறார் சென்னை மேயர் பிரியா.
சென்னை மாநகராட்சியில், பொதுமக்களிடம் 1913 தொலைபேசி எண், நம்ம சென்னை செயலி, தபால்கள் வாயிலாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பார்வையாளர்கள் நேரம் ஒதுக்கப்பட்டு, பொதுமக்களிடம் மேயர் முதல் அதிகாரிகள் வரை மனுக்களை பெறுகின்றனர். அதேநேரம், பலநேரங்களில் மேயர், அதிகாரிகள் மற்ற நிகழ்ச்சிகள், ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பதால், அவர்களை சந்திப்பது பொதுமக்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி 2023 – 24ம் பட்ஜெட் கூட்டத்தொடரில், ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்தார். அந்தத் திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் மே 3-ம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதற்கட்டமாக “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ், வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மே 3-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
வடக்கு வட்டாரத்தில் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக அளிக்கலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.