கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினி வழிபாட்டில் கலந்து கொண்ட பெண் விமான ஊழியரும் அவரது மகனும் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
73 பேர்களின் சடலங்கள்
கிழக்கு கென்யாவில் அமைந்துள்ள ஷகாஹோலா வனப்பகுதியில் இருந்து இதுவரை அந்த தேவாலயத்தின் பக்தர்கள் என கூறப்படும் 73 பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
Image: Newsflash
800 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பால் மெக்கன்சி என்ற போதகரின் தேவாலயத்தில் பதிவு செய்தவர்கள் என்றே கூறப்படுகிறது.
உலகம் அழியும் முன் பரலோகம் சென்று இயேசுவை சந்திப்போம் என்று நம்பி பட்டினி வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் இவர்கள்.
கத்தார் நாட்டில் விமான சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் அஜெந்தா சார்லஸ்.
சில வாரங்கள் முன்னர் தமது வேலையை விட்டுவிட்டு, பால் மெக்கன்சியின் தேவாலயத்தில் இணைந்துள்ளார்.
ஏப்ரல் 4ம் திகதி தான் கடைசியாக அஜெந்தா சார்லசை அவரது தோழி ஒருவர் சந்தித்துள்ளார்.
இவரது மகன் ஜேசன் மார்ச் மாதம் தனது தாத்தா பாட்டியின் கண்காணிப்பில் வழிபாட்டில் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது.
இதனிடையே, கென்ய செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் மொத்தம் 112 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கணவருக்கு கைப்பட கடிதம்
அஜெந்தா சார்லஸ் மட்டுமின்றி, இவரது சகோதரி கான்ஸ்டன்ஸ் சாவ் என்பவரும் ராணுவத்தில் தமது வேலையை விட்டுவிட்டு குறித்த தேவாலயத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Image: Newsflash
ஆனால் அவர் இறந்தாரா அல்லது உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் இல்லை.
தேவாலயத்தில் இணையும் முன்னர் அஜெந்தா சார்லஸ் தமது குடியிருப்பு உட்பட அனைத்தையும் விற்றுவிட்டு, அந்த தொகையை போதகர் பால் மெக்கன்சியின் தேவாலயத்தில் செலுத்தியதாக கூறப்படுகிறது.
கென்யா திரும்பும் முன்னர், தமது கணவருக்கு கைப்பட கடிதம் எழுதிய அஜெந்தா சார்லஸ், தாம் இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.