தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 1930-40 களில் நடக்கும் கதை எனக் கூறப்படுகிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு போர் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தற்போது தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கே படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி ஷூட்டிங்கிற்கு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தடை விதித்துள்ளார்.
newstm.in