ஜெனீவா: சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உள்நாட்டு போராக வெடித்து இருக்கும் நிலையில் அந்நாட்டு தலைநகரில் உள்ள ஆய்வுக் கூடம் ஒன்று போரிடும் ஒரு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு இருப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானின் சக்தி வாய்ந்த துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எப்-இன் செயல்பாடுகள் கடந்த சில நாட்களாக தன்னிச்சையாக உள்ளது எனவும், அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்துக்கு கட்டுப்படாமல் துணை ராணுவ படைசெயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய செயல்பாடுகள் சட்டத்துக்கு புறம்பானவை என்று சூடான் நாட்டு ராணுவம் துணை ராணுவ படையை கண்டித்தது.
இதன் காரணமாக ராணுவத்திற்கும் துணை ராணுவ படைக்கும் இடையில் மோதல் வெடித்தது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி இந்த மோதல் பூதாகரமாக வெடிக்கவே இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர். தலைநகர் கார்ட்டூம், அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தன.
துப்பாக்கிச் சூடு, குண்டுவீச்சு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருவதால் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. விமான நிலையம், ராணுவ தலைமையகம், ஜனாதிபதி மாளிகை போன்ற பல பகுதிகளை துணை ராணுவப் படை கைப்பற்றி உள்ளது. இதுவரை நடந்த மோதலில் 459 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 4,072 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
சுதாதார நிலையங்கள் மீது நடத்தப்பட்ட 14 தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் ஐநா தெரிவித்து உள்ளது. இந்த போர் குறித்து ஜெனீவாவில் உள்ள செய்தியாளர்களிடம் சூடானில் இருந்து வீடியோ கால் மூலம் உலக சுகாதார நிறுவன அதிகாரி நிமா சயீத் ஆபித் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சூடான் தலைநகர் கார்டோமில் தேசிய பொது சுகாதார ஆய்வுக் கூடம் அமைந்து இருக்கிறது.
அதில் மீசல்ஸ், போலியோ, காலரா உள்ளிட்ட மிகவும் ஆபத்தான வைரஸ் உள்ளிட்ட நுண்கிருமிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. தற்போது உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் ஒரு குழுவால் அந்த ஆய்வுக்கூடம் கைப்பற்றப்பட்டு உள்ளது. சுகாதார அதிகாரிகளை அதை நெருங்க முடியவில்லை. அங்கு வைக்கப்பட்டு உள்ள ஆபத்தான நுண்கிருமிகளை பாதுகாப்பது இயலாத காரியமாக இருக்கிறது. அவை அனைத்தும் உயிர்களை கொல்லும் ஆபத்தான நோய்களின் நுண்கிருமிகள். இது மிக மிக மோசமான உயிரியல் ஆபத்து.
கைப்பற்றிய குழுவினர் ஆய்வுக் கூடத்தில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி இருக்கிறார்கள். நிலைமை கைமீறி சென்றுவிட்டது.” என்று தெரிவித்து இருக்கிறார். அதே நேரம் எந்த பிரிவினரால் அந்த ஆய்வுக் கூடம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. WHO வெளியிட்டு இருக்கும் இந்த தகவல் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்படிதான் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் அமைந்து இருக்கும் ஒரு ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம்சாட்டின. அதன் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதன் தாக்கத்தை இன்றளவும் உலகம் எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சூடான் அடுத்த வூஹான் ஆகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்கி உள்ளது.