தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்க நாளை விழுப்புரம் செல்ல உள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வில் ஈடுபட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன்படி நாளை அவர் விழுப்புரம் செல்ல உள்ள நிலையில் நாளை மற்றும் மறுநாள் இரண்டு நாட்கள் முதலமைச்சரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நகர்புற வளர்ச்சி, இளைஞர் திறன் மேம்பாடு, சாலை மேம்பாடு, மருத்துவம், கல்வி மற்றும் குழந்தைகள் நலன் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கே.என் நேரு, ஏ.வ வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கணேசன், அன்பில் மகேஷ், செஞ்சி மஸ்தான், பெரியசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதைத் தவிர அரசுத்துறை அதிகாரிகள், ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மாலை காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் விவசாய சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பெருமக்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 27ஆம் தேதி மாலை விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.