புதுடெல்லி: “இந்தியாவில் எரிபொருட்களின் விலை மிக அதிகம் என கட்டுக் கதைகள் பரப்பப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சீரிய முயற்சியின் பலனாக, எரி பொருட்களின் விலை குறைவாக உள்ள உலக நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பது என்பதுதான் எவரும் மறுக்க முடியாத உண்மை“ என்று மத்திய வீட்டு வசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் இணையதளத்திற்கு அவர் பிரத்யேகமாக எழுதிய கட்டுரையின் விவரம்:
“உண்மைக்கு மாறாக அவ்வப்போது கட்டுக் கதைகள் பரப்பப்படுவது வழக்கமாக உள்ளது. அதனை வேண்டுமென்றே பரப்புவோரின் உண்மை முகத்தை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டியது அத்தியாவசிமாகிறது. ‘வரலாற்றாளர்கள் உண்மையை மறைத்து வரலாற்றை பதிவு செய்வது அடிப்படை ஆதாரமற்றதாகவும், அர்த்தமற்றதாகவும் மாறிவிடும். வரலாற்றாளர்களற்ற உண்மைகள் மறைந்து போகும், அர்த்தமற்றதாகப் போகும்’ என பிரிட்டிஷ் வரலாற்றாளர் இ.ஹெச்.கார் கூறியுள்ளார்.
இதே நோக்கத்தில் எரிபொருட்களின் உயர்வை புரிந்து கொள்ள முயற்சித்தால், உலக நாடுகளில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகக் குறைவு என்பது நிரூபணமாகும்.
இந்தியாவில் எரிபொருட்களின் விலை மிக அதிகம் என கட்டுக் கதைகள் பரப்பப்படுகின்றன.ஆனால், நாட்டு மக்களுக்கு தரமான மற்றும் மிகக் குறைந்த விலையிலான எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சீரிய முயற்சியின் பலனாக, எரிப்பொருட்களின் விலை குறைவாக உள்ள உலக நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பது என்பதுதான் எவரும் மறுக்க முடியாத உண்மை.
கடந்த 2021 நவம்பர் மற்றும் 2022ம் ஆண்டு மே மாதங்களில் மத்திய கலால் வரியை 2 முறை பிரதமர் நரேந்திர மோடி குறைத்தார். இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.13, டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 குறைந்தது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2.2 லட்சம் கோடி கூடுதல் சுமையாக மாறியது.
அதே நேரத்தில், ஏற்றுமதிக்கான செஸ் வரி மற்றும் உள்நாட்டில் உற்பத்திற்காக தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்களுக்கான எதிர்பாரா லாபத்தின் மீதான வரியை அரசு விதித்தது. இதன்மூலம், உள்நாட்டு நுகர்வோரிடம் லாபம் ஈட்டுவதிலிருந்து ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு தடுத்திருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இருந்த போதிலும், அதனைத் தாங்கிக் கொண்டு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குடிமக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விநியோகம் செய்து வருகின்றன.
பல மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் அவற்றுக்கு விதிக்கப்படும் வாட் வரியை ரத்து செய்ய மத்திய அரசு முன்வந்தது. இந்நிலையில், சில மாநிலங்கள் வாட் வரி ரத்து கிடையாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.
குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.50 முதல் ரூ.17.50 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.26.32 முதல் ரூ.32 வரையும் குறைந்தது. இதனால் பொதுமக்களின் எரிபொருட்களுக்கான செலவில் பெரும்பங்கு குறைந்தது.
எனினும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.48க்கும், 1லிட்டர் டீசல் ரூ.93.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தோடு ஒப்பிடும்போது பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.12ம், டீசலுக்கு ரூ.4ம் அதிகமாகும். அதாவது உத்திரப்பிரதேசத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.57-ஆகவும், டீசல் விலை ரூ.89.76-ஆகவும் உள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆளும் ஆந்திரப் பிரதேசத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.48-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.27-ஆகவும் உள்ளது. இது கர்நாடகா மாநிலத்தோடு ஒப்பிடும்போது சுமார் ரூ.10 அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவில் இரண்டாவது ஆண்டாக அதிக விலையில் பெட்ரோலை விற்பனை செய்யும் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் சாதனைப் படைத்துள்ளது.
2021-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் சர்வதேச அளவில் இயற்கை எரிவாயு விலை உயர்வு 228 சதவிகிதம் அதிகரித்தபோதிலும், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு 83 சதவிதத்திலே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 2013-2014ம் நிதியாண்டு முதல் தற்போது வரை உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இயற்கை எரிவாயுவுக்கான ஒதுக்கீடு 250 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு அடிப்படையிலான பொருளாதார இலக்கை அடைய வழிவகை செய்யும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் உற்பத்தியை மாற்றியமைப்பதற்கான கொள்கையை அண்மையில் வெளியிட்டது.
இதன் மூலம் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் குழாய் இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலை ரூ.7 முதல் ரூ.8 வரை குறைந்துள்ளது. நாட்டின் 140 கோடி மக்களுக்கும் தரமான குறைந்த விலையிலான எரிசக்தியை வழங்க வேண்டும் என்பது இந்தியாவின் குறிக்கோள்.
இதை உலக நாடுகள் பாராட்டி வரும் வேளையில், சில மாநில அரசியல் தலைவர்கள் குடிமக்களுக்கு எதிரான தந்திரங்களைப் பயன்படுத்தி எரிபொருள் விலை குறித்த கட்டுக்கதைகளை வெளியிட்டு வருகின்றனர். எனவே, அந்த மாநிலங்களும் தங்கள் குடிமக்கள் நலன் கருதி எரிபொருள் மீதான வரியைக் குறைக்க வேண்டிய தருணம் இது“
கட்டுரையாளர்: மத்திய வீட்டு வசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி