முதல்வர்
இன்று விழுப்புரம் மாவட்டம் சென்று ஆய்வு மேற்கொள்கிறார், விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 26) விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதை முன்னிட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்றே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா, நலத்திட்ட உதவிகள் பொதுமக்களை சென்றடைகின்றனவா என்பன குறித்து மாவட்டம் தோறும் நேரில் சென்று ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகிறார். நாளை விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
மாலை 4 மணியளவில் முதல் நிகழ்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாளை (ஏப்ரல் 27) காலை 9.30 மணிக்கு 3 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கள ஆய்வு நடைபெறவுள்ளது” என்று கூறினார்.