டெல்லி கிளம்பும் ஸ்டாலின்: குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர்

நாளை (ஏப்ரல் 27) இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகில இந்திய அரசியலில் ஈடுபடு போகிறோம் ஸ்டாலின் சூளுரை

முதல்வர் ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார். இன்று மாலை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுகிறார். தொடர்ந்து விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாளை (ஏப்ரல் 27) காலை 9.30 மணிக்கு 3 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கள ஆய்வு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர் சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத் தலைவரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவருடனான சந்திப்பின் போது ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த புகார் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிற மாநில முதலமைச்சர்களையும் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அந்தந்த மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறிவருகிறார். இந்த சூழலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு காலமே உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணி அமைக்க வேண்டும் என்று கூறி வரும் ஸ்டாலின் அது தொடர்பான சந்திப்புகளையும் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.