சிம்லா:
சமீபகாலமாக இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு கொரோனா பாதிப்புதான் காரணம் என்று பிரபல மருத்துவரும், தேசிய தொற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் ஆலோசகருமான நரேஷ் புரோகித் கூறியுள்ளார். மேலும், இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் அண்மைக்காலமாக மாரடைப்பால் உயிரிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் இளம் வயதினர் திடீர் மாரடைப்பால் அப்படியே சரிந்து உயிரிழக்கும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. இளம்வயதினர் என்றால் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட அல்ல.. பள்ளி கல்லூரி மாணவ – மாணவிகளும் திடீர் மாரடைப்புக்கு பலியாகி வருகின்றனர்.
கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம், வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு என்ற செய்திகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது பிரேக்கிங் நியூஸில் இடம்பிடித்து விடுகின்றன. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளாகதான் இந்த அதிர்ச்சி சம்பவங்களை அதிகமாக பார்க்க முடிகிறது.
பகீர் ஆராய்ச்சி முடிவுகள்:
இந்த மாரடைப்புக்கு என்ன காரணம் என தெரியாமல் மருத்துவ உலகமே விழிபிதுங்கி நின்று கொண்டிருந்த சூழலில், கொரோனா பாதிப்புதான் இதற்கு மெயின் ரீசன் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து டாக்டர் நரேஷ் புரோகித் கூறுகையில், “உலக அளவில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் திடீரென அதிகரிக்கும் மாரடைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள்தான். இந்த ஆய்வு முடிவுகளில் கொரோனா பாதிப்புக்கும், மாரடைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.
கொரோனா + ரத்தம் உறைதல்:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது. ஏனெனில், கொரோனா வைரஸ்கள் மனித உடலில் ரத்தத்தை சட்டென உறைய வைக்கின்றன. ஒருவேளை, இந்த ரத்த உறைதல் இதயக்குழாய்களில் நிகழும் போது அது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. தற்போது இந்தியாவில் ஏற்படும் மாரடைப்புகளை பார்க்கும் போது, அதற்கு கொரோனாதான் காரணம் எனத் தெரிகிறது.
எப்படி கண்டறிவது?
இந்த சமீபத்திய மாரடைப்பு மரணங்களை 2 வகைகளாக பிரிக்கலாம். ஒன்று, சற்று வயதானவர்கள் அல்லது சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரிடும் மரணம். இரண்டாவது, எந்த இணை நோய்களும் இல்லாமல் இருக்கும் ஆரோக்கியமான இளைஞர்களுக்கு ஏற்படும் மரணம். இதில் முதல் வகையை, இசிஜி, 2டி எக்கோ மற்றும் டிஎம்டி போன்ற சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இரண்டாவது வகையை, நீண்டகால இசிஜி கண்காணிப்பு, எலக்ட்ரோ உடலியக்கம் சோதனைகள், மரபணு சோதனைகள் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்.
பரிசோதனை செய்துகொள்ளுங்கள்:
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை சோதனையை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் மற்றும் டிரெட்மில் சோதனைகளை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் செய்ய வேண்டும்.
கடுமையான உடற்பயிற்சி வேண்டாம்:
இந்த மாரடைப்பு அபாயத்தில் இருந்து தப்பிக்க ஆரோக்கியமான சமர்ச்சீர் உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மன அழுத்ததை குறைக்க வேண்டும். தினமும் குறைந்தது 6 முதல் 8 மணிநேரமாவது உறங்க வேண்டும். அதேபோல், உடற்பயிற்சி செய்கிறோம் என்ற பெயரில் ஆரம்பக்கட்டத்திலேயே கடுமையான பயிற்சிகளை செய்ய வேண்டாம். இவ்வாறு டாக்டர் நரேஷ் புரோகித் கூறினார்.