புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,692 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 6,934 என்றளவில் இருந்த நிலையில், நேற்றை விட 40 சதவீதம் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. என்றாலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 9,692 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 61,013 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,398 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,967 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,43,23,045 பேர்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.