திருப்பூர்: அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிக்கு சீல்; பரிதவிக்கும் மாணவர்கள் – விசாரணை தீவிரம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஓலப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த `ஸ்ரீ செல்வநாயகி மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரோபதி’ என்ற மருத்துவக் கல்லூரி, அரசின் அங்கீகாரம் பெறாமல் டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பி.இ.எம்.எஸ், எம்.டி. (இ.ஹெச்) போன்ற படிப்புகளை பயிற்றுவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்தக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

இந்த நிலையில், அந்தக் கல்லூரியில் பயின்ற மாணவ,மாணவியர்கள் ஓலப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள், “பல ஆயிரம் செலவு செய்து இந்தக் கல்லூரியில் படித்து வருகிறோம். தொடக்கத்திலேயே அரசு, இது தொடர்பாக ஆய்வு செய்திருந்தால் எங்களுக்கு பணமும், காலமும் விரயமாகி இருக்காது. தற்போது எங்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது” என்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி, “ஓலப்பாளையத்தில் `ஸ்ரீ செல்வநாயகி மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரோபதி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கல்லூரியில் டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பி.இ.எம்.எஸ்., எம்.டி. (எலக்ட்ரோ ஹோமியோபதி) ஆகிய படிப்புகள் இருக்கின்றன. இந்த 2 படிப்புகளையும் பயிற்றுவிக்க அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.

டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பை நடத்துவதற்கு சென்னை மருத்துவ கல்வி இயக்ககத்திடமிருந்து எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. பி.இ.எம்.எஸ். அன்ட் எம்.டி. (எலக்ட்ரோ ஹோமியோபதி) படிப்பு தமிழ்நாட்டில் நடத்துவதற்கும், படித்து முடித்தவர்கள் சிகிச்சை அளிப்பதற்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் உரிய சான்றுகள் பெறாமல் மருத்துவம் சார்ந்த படிப்புகளை பயிற்றுவித்ததுடன், வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதும் தெரியவந்ததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை அமல்படுத்தும் விதமாக, ஓலப்பாளையத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீ செல்வநாயகி மெடிக்கல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் எலெக்ட்ரோபதி மற்றும் மருத்துவமனைக்கு சீல் வைத்திருக்கிறோம்.

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு நர்சஸ் கவுன்சில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மெடிக்கல் யுனிவர்சிட்டி, புதுடெல்லி இந்தியன் நர்சிங் கவுன்சில் ஆகியவற்றில் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இவையின்றி வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களின் மூலம் பெறப்படும் அங்கீகாரம் செல்லாது. இல்லையெனில் அறியாமையால் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் கிளினீக்குகள், மருத்துவமனைகள், அரசு மருத்துவ நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 1997-ன்படி பதிவு பெற வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்புகளை முடித்தவர்கள் யாரும், மேற்படி சட்டத்தின்படி தனியார் மற்றும் அரசு மருத்துவ நிலையங்களில் பணிபுரிய தகுதியற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.

மாணவ, மாணவிகள் மருத்துவ கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு முன்பு, அவை தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறும் விசாரணையில், மருத்துவக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் தரண்யா, முதல்வர் பாலசுப்பிரமணியம் கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.