ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நம் நாட்டில் மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் பெருக்கத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, 33 சதவீதமாக இருக்க வேண்டிய வனப்பரப்பு, தற்போது, 24.62 சதவீதமாக குறைந்துவிட்டது.
பண்ணை காடுகள் திட்டம்
இதை ஈடு செய்யும் விதமாக விவசாய நிலங்களில் மரங்கள் வளர்த்து வேளாண் மற்றும் பண்ணை காடுகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களும், மக்களுக்கு தேவையான கட்டுமான மற்றும் எரிபொருள் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன.
இதற்காக, ‘தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலை வாயிலாக, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அறிமுகம் செய்து மரம் சார்ந்த தொழில் நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான தொழிற்சாலைகளுக்கு ஒரு ஆண்டின் மரத்தேவை, 74 லட்சம் டன் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரத்தேவையில், 10 சதவீத மரங்கள் வனத்தோட்டத்திலும், மீதமுள்ள 90 சதவீதம் வனத்துக்கு வெளியே வேளாண் காடுகள், பண்ணை காடுகளில் இருந்தும் பூர்த்தி செய்யப்படுகின்றன.
முதல்முறையாக மரங்களுக்கு காப்பீடு
வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காகிதம், ஒட்டுப்பலகை மற்றும் தீக்குச்சி மரங்களில் உயர்தர மரங்களை கண்டறிந்து, அவற்றை ‘குளோனல்’ முறையில் உற்பத்தி செய்து, அதிக மகசூல் தரும் வனத்தோட்டங்களை உருவாக்கி, அவற்றை தொழிற்சாலைகளுடன் இணைந்து மாதிரி தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், 75 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில், இத்திட்டம் 10 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. வேளாண் காடுகளில் வளர்க்கப்படும் மரங்களுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக மரப்பயிர் காப்பீடு திட்டம், 2013ல் அறிமுகம் செய்து செயல்பட்டு வருகிறது. சவுக்கு, தைலம், மலைவேம்பு, குமிழ், சுபாபுல், தீக்குச்சி மரம், சிசு ஆகிய மரங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
வனக்கழிவுகளை மதிப்பு கூட்டுதல்
வேளாண் காடுகள் வாயிலாக, 20 சதவீதம் தோட்ட கழிவுகளும், 40 சதவீதம் தொழிற்சாலை சார்ந்த கழிவுகளும் பெறப்படுகின்றன. இக்கழிவுகளை மதிப்புக்கூட்டு தொழில் நுட்பம் வாயிலாக எரிகட்டிகளாக, கரியாக, கரிமமாக, கால்நடை தீவனமாக மேம்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக புதிய தொழில் முனைவோர்கள் உருவாகி வருகின்றனர்.
வேளாண் காடுகளை மேலும் ஊக்கப்படுத்தவும், புதிய வனம் சார்ந்த தொழில் முனைவோரை உருவாக்கவும், இந்தியாவிலேயே முதல்முறையாக வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு மையம், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில் உருவாக்கப்பட்டுள்ளது.
வனவளம் பாதுகாப்பு
இந்த மையத்தின் முக்கிய நோக்கம், படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள், மகளிர், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய, வேளாண் காடுகள் சார்ந்த தொழில் முனைவோரை உருவாக்குவதே.
இதன் வாயிலாக, வனம் மற்றும் வேளாண் காடுகள் சார்ந்த தொழில் நுட்பங்களை பயனாளிகளுக்கு கற்றுக்கொடுத்து, புதிய தொழில் முனைவோர் உருவாக்கப்படுகின்றனர். இதனால், தமிழகத்தில் வனவளம் பாதுகாக்கப்படுவதோடு, மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் வனங்களாக மாறக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. இதனால், விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடைவர். அவ்வாறான மாற்றம், தமிழகத்தின் ஒரு பொன்னாளாக அமையும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்