`இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்க ப்ளீஸ்'- விகடன் விழா மேடையில் மனைவியிடம் சொன்ன ரஹ்மான்!

2020, 2021, 2022 ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் ‘சினிமா விருதுகள் விழா கடந்த மார்ச் 30ம் தேதி நடைபெற்றது. கமல், மணிரத்னம், ரஹ்மான், சூர்யா, லோகேஷ், நெல்சன், சிவக்கார்த்திகேயன் உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விழாவில் ‘வெந்து தனிந்தது காடு’ படத்தின் ‘மறக்குமா நெஞ்சம்….’ பாடலுக்காக 2022ம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது மற்றும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தனிந்தது காடு’ படத்திற்காக 2022ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருது என இரண்டு விருதுகளை வென்றிருந்தார் ரஹ்மான்.

ரஹ்மான்

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பேசிய ரஹ்மான், ” ‘எல்லா புகழும் இறைவனுக்கே’. ‘வெந்து தனிந்தது காடு’ படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனமன், சிம்பு எல்லோருக்கும் நன்றி. இந்த விருதை என் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். “என்னுடைய குரலின் முதல் ரசிகை என் மனைவிதான். அவர்தான் என் குரல் நல்லா இருக்கு என்று முதன்முதலில் என்னிடம் சொன்னவர். அந்த தைரியத்தில்தான் பாடல்கள் பாட ஆரம்பித்தேன். இப்போதும், பாடல்கள் மட்டுமல்ல நான் நேர்காணல்களில் பேசுவதைக் கூட கேட்டுக்கொண்டே இருப்பார்” என்று கூறிய ரஹ்மான், தன் மனைவி பேச ஆரம்பிக்கும்போது ‘இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்கள் ப்ளீஸ்’ என்று கலாய்த்தார்.

பிறகு பேசிய ரஹ்மானின் மனைவி, “Sorry, எனக்கு சரளமாக தமிழ் பேச வராது, அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ரஹ்மானின் குரல் என்னுடைய ஃபேவரைட் குரல். நான் அவருடைய குரலினால் விழுந்து விட்டேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். பின்னர், ரஹ்மான் தன் மனைவிக்காக ‘மறக்குமா நெஞ்சம்….’ பாடலை தனது மயக்கும் குரலில் பாடினார்.

இதையடுத்து ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தனிந்தது காடு’ படத்திற்காக 2022ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றது குறித்து பேசிய ரஹ்மான், “இந்த விருதை என்னோட குழுவினருக்குச் சமர்ப்பிக்கிறேன். நான் வீடியோ காலில் பேசி அவர்களிடம் இசை கம்போஸ் செய்ய உதவி கேட்பேன். ஒருசமயம் அவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி பக்கத்தில் ஹோட்டல் புக் செய்து எனக்காக இசையை கம்போஸ் செய்து கொடுத்தார்கள். நிறைய மாணவர்கள் எனக்கு உதவிய செய்திருக்கிறார்கள். பகல், இரவு என எப்போது அழைத்தாலும் வந்து உதவி செய்வார்கள். அவர்கள் உதவியின்றி எதுவும் நடந்திருக்காது. எனவே அற்புதமான என்னுடைய குழுவினருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இயக்குநர்கள் மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனம், அஜய் என எல்லோருக்கும் நன்றி. ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ ” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.