பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி ஆதரவு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத), ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக களமிறங்குகின்றன. இதில் பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் மஜத மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் கர்நாடகாவில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு கோரினார்.
இதையடுத்து தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை ஒட்டியுள்ள கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் மஜத வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.