டேரா பாசி :பஞ்சாபில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து தரமற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ள நிலையில், இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்க, வெளிநாடுகளில் அந்த மருந்து போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக மருந்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மூலப்பொருட்கள்
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளான மைக்ரோனேஷியா மற்றும் மார்ஷல் தீவுகள் ஆகிய இடங்களில் விற்பனையில் உள்ள, ‘குவாய்பெனெசின்’ என்ற இருமல் மருந்து தரமற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் குற்றஞ்சாட்டியது.
இந்த மருந்தில், ‘டைத்திலின் கிளைகால்’ மற்றும் ‘எத்திலின் கிளைகால்’ என்ற மருத்துவ மூலப்பொருட்கள் அளவுக்கு அதிகமான அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
பஞ்சாபைச் சேர்ந்த, ‘க்யூ.பி., பார்மா கெம்’ என்ற நிறுவனம், இந்த இருமல் மருந்தை தயாரிக்கிறது.
வாய்ப்பு
ஹரியானாவைச் சேர்ந்த, ‘டிரில்லியம் பார்மா’ என்ற நிறுவனம் இதை வினியோகம் செய்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு, க்யூ.பி., பார்மா கெம் நிர்வாக இயக்குனர் சதிர் பதக் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த இருமல் மருந்தை பார்த்து அதே போல போலியாக தயாரித்து, அதை மார்ஷல் தீவுகள் மற்றும் மைக்ரோனேஷியாவுக்கு யாரோ விற்பனை செய்திருக்க வாய்ப்புள்ளதாக பஞ்சாப் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சந்தேகப்படுகிறது.
நம் நாட்டின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவே இந்த போலி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
எங்கள் ஆலையில் இருந்து அதே இருமல் மருந்தின் மாதிரிகளை, உணவு மற்றும் மருந்துநிர்வாக துறையினர் பரிசோதனைக்காக கம்போடியா அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்