பிடிஆர் ஆடியோ லீக்ஸ்.. பாய்ந்து அடிக்கும் பாஜக.. ஒதுங்கி நிற்கும் அதிமுக.. தொண்டர்கள் அப்செட்!

சென்னை:
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ லீக்ஸ் தான் இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக காட்டும் தீவிரத்தை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக காட்டாதது ஏன் என்று அக்கட்சித் தொண்டர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.

அமைச்சர் பிடிஆர் Strategy – கரு.பழனியப்பன் புகழாரம்!

ஏற்கனவே பல விவகாரங்களில் திமுக vs பாஜக என்ற நிலையே நிலவி வரும் சூழலில், இவ்வளவு பெரிய விஷயத்திலும் அதிமுக பட்டும் படாமல் நடந்துகொள்வது தொண்டர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) பேசியதாக அடுத்தடுத்து ஆடியோ கிளிப்புகள் வெளியாகி திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் பிரதானமாக குறி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

புயலை கிளப்பிய ஆடியோ:
முதலில் சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவில், உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களின் மூதாதையர்களை விட அதிகம் சம்பாதித்துவிட்டதாகவும், 10 கோடி, 20 கோடி என சுமார் 30 ஆயிரம் கோடி வரை அவர்களிடம் உள்ளதாகவும் ஒருவர் கூறுகிறார். மேலும், அந்த பெரும் தொகையை எப்படி கையாளுவது, எப்படி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது என அவர்கள் திணறி வருவதாகவும் அதில் கூறப்படுகிறது. நிதியமைச்சர் பிடிஆர் தான் இப்படி பேசி இருப்பதாக சவுக்கு சங்கர் கூறினார்.

களமாடும் அண்ணாமலை:
இந்த விஷயம் தமிழகம் மட்டுமல்லாம் தேசிய அரசியலிலும் பெரும் பூதாகரமாக வெடித்தது. திமுக அமைச்சர் ஒருவரே அவரது சக அமைச்சர் பற்றி இவ்வாறு பேசுகிறாரே என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சில தினங்களுக்கு பிறகு விளக்கம் அளித்த பிடிஆர், இந்த ஆடியோ போலியானது என்றும், தொழில்நுட்பத்தின் உதவியால் எனது குரலை போல அது மாற்றப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னை போல் பேசுங்கள்..
ஆனால், அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்காத பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த ஆடியோ குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக ஆளுநரிடம் ஒரு குழுவை அனுப்பி கடிதம் அளித்தார். மேலும், தொழில்நுட்ப உதவியால் குரல் மாற்றப்பட்டதாக கூறும் பிடிஆர், என்னை போல பேசி ஒரு ஆடியோவை வெளியிட முடியுமா என்றும் பகிரங்கமாக சவால் விடுத்தார்.

இரண்டாவது ஆடியோ:
இவ்வாறு இந்த விஷயத்தில் பாஜக ஒரு குட்டி போரையே நடத்திக் கொண்டிருக்க, அதிமுகவோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்த ஆடியோ விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடியும், ஜெயக்குமாரும் ஒப்புக்கு பேசிவிட்டு சென்றனர். ஆனால், பிராதன எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் கொண்டு செல்ல அதிமுக ஆர்வம் காட்டவில்லை. இந்த சூழலில்தான், பிடிஆர் பேசியதாக இரண்டாவது ஆடியோவை அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.

“நான் விலகினால் அவங்களுக்கு ஆபத்து”..
அதில், “ஒருநபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும், மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தனித்தனியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தான் எடுக்கிறார்கள். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான். இது ஒரு நிலையான மாடல் கிடையாது. இப்போது நான் விலகினால் கூட, அவர்கள் செய்தது அவர்களுக்கே எதிர்வினையாக திருப்பி அடிக்கும்… இவ்வாறு பிடிஆர் பேசியதாக அந்த ஆடியோ நீள்கிறது.

சைலண்ட் மோடில் அதிமுக:
தற்போது இந்த ஆடியோ குறித்தும் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைமை தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விஷயத்தில் அண்ணாமலை கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே சில இடங்களில் ஐடி ரெய்டுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போதும் அதிமுக இந்த விஷயத்தில் சைலன்ட் மோடில் இருப்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தொண்டர்கள் அப்செட்:
திமுகவுக்கு எதிராக இவ்வளவு பெரிய விஷயம் கையில் கிடைக்கும் போது, அதை வைத்து அரசியல் செய்வதுதானே ஒரு பிரதான எதிர்க்கட்சிக்கு அழகு.. ஏதோ திமுகவினரை போல இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்ன மாதிரியான அரசியல் தந்திரம் என அதிமுக தொண்டர்களே கேள்வியெழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பல முக்கிய விவகாரங்கள் திமுக vs பாஜக என்ற ரீதியிலேயே சென்று கொண்டிருக்கும் போது, இந்த விஷயத்திலும் அதிமுக ஒதுங்கி இருந்தால் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையும் தகர்ந்துவிடும் என்கின்றனர் தொண்டர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.