
ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து 360 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன.

ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் முதல்கட்டமாக சூடானில் இருந்து 360 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
முன்னதாக சூடானில் இருந்து இந்தியர்கள் கப்பல் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டனர். ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றி கொண்டு விமானம் டெல்லி வந்தடைந்தது.
அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட உள்ளனர். டெல்லி வந்த இந்தியர்களில் 9 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் இன்று விமானம் மூலம் சென்னை வருகின்றனர்.
newstm.in