கர்நாடகா தேர்தல்.. பாஜகவுக்கு எதிராக திரும்பிய இந்துத்துவா.. களம் தெரியாமல் ஆடிய 'பொம்மை'! மிஸ் ஆன 'தல'

பெங்களூர்:
கர்நாடகாவின் சிம்மாசனத்தை பிடிக்கும் போட்டியில் காங்கிரஸ் அசுர பலத்துடன் முந்தி வரும் சூழலில், பாஜக இந்த பின்னடைவை சந்தித்ததற்கு என்ன காரணம் என்பதை அலச வேண்டியது அவசியமாகிறது. வட மாநிலங்களில் பாஜக செய்யும் அரசியல் கர்நாடகாவில் எடுபட்டுள்ளதா? வடக்கே செல்லுபடியான பாஜகவின் ‘மேஜிக்’ கன்னட மக்களை ஈர்த்திருக்கிறதா? இங்கு பார்க்கலாம்.

இப்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் முன்னிலையில் இருப்பது காங்கிரஸ் தான். கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் இதை உறுதிப்படுத்தி விட்டன. கள யதார்த்தமும் அதைதான் சொல்கிறது. அதே சமயத்தில், பாஜக ஒன்றும் மிக பின்தங்கிய நிலையில் எல்லாம் இல்லை. காங்கிரஸுக்கு சற்று பின்னால்தான் பாஜக இருக்கிறது. அதனால், இந்தக் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகளை தீர்க்கமாக சொல்வது கடினம்தான்.

ஆனால், இதற்கு முன்பெல்லாம் வட மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களின் போது வெளியாகும் கருத்துக்கணிப்புகளில் பாஜகவே முன்னிலையில் இருந்தது.. தேர்தல்களிலும் அது அப்படியே பிரதிபலித்தது. அப்படி இருக்கும் போது, கர்நாடகாவில் பாஜக அடைந்திருக்கும் இந்த திடீர் சறுக்கலுக்கு என்ன காரணம் என யோசித்து பார்த்தால், பதில் என்னவோ ‘பாஜக’ என்று தான் வருகிறது. கர்நாடகாவின் களம் தெரியாமல் விளையாடியதன் விளைவாகவே, பாஜகவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றே நம்மை நினைக்க வைக்கிறது.

எடியூரப்பா என்ற ‘தனி ஒருவன்’:
கர்நாடகா மக்களின் ஒவ்வொரு நாடித்துடிப்பையும் தெரிந்து வைத்திருந்த எடியூரப்பாவை அகற்றிவிட்டு, அதே களத்தில் பசவராஜ் பொம்மையை விளையாட விட்டதுதான் பாஜக செய்த மிகப்பெரிய தவறு என அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர். கர்நாடகாவில் கால் ஊன்றவே முடியாது என்ற நிலைமையில் இருந்த பாஜகவை, தனி ஒருவனாக அரியணையில் ஏற்றியது எடியூரப்பா தான் என்பதை வரலாறு மறக்காது. சொல்லப்போனால், அவர் அன்றைக்கு ஆடிய களமே வேறு. பாஜகவுக்காக கர்நாடகாவின் களத்தை அவர் மாற்றவில்லை. கர்நாடாகவுக்கு ஏற்ப பாஜகவின் முகத்தை அவர் மாற்றினார் என்பதே உண்மை.

மக்கள் செல்வாக்கே பிரதானம்:
வட மாநிலங்களில் மத அரசியலை மையமாக வைத்து களமாடி வந்த பாஜகவுக்கு, ஜாதி காய்களை நகர்த்த சொல்லித் தந்தவர் எடியூரப்பா தான். சொந்த ஜாதியான லிங்காயத்துகளின் பேராதரவு தனக்கு இருந்தாலும், ஒருபோதும் மற்ற ஜாதிகளை எடியூரப்பா பகைத்துக் கொண்டது கிடையாது. அதேபோல, எந்த மதத்தினருக்கும் எதிராக அவர் செயல்பட்டது கிடையாது. இதுதான் எடியூரப்பாவை மக்கள் தலைவராக உயர்த்தியது. பாஜகவை ஆட்சியில் அமர்த்தவும் உறுதுணையாக இருந்தது. மக்கள் செல்வாக்கையும், வலுவான ஜாதி கூட்டணியைும் பயன்படுத்தி தான் பாஜகவை அவர் ஆட்சியில் அமர்த்தினாரே தவிர, மத அரசியலை அவர் என்றைக்கும் கர்நாடகாவுக்குள் நுழைய விட்டதில்லை.

இந்துத்துவா அரசியல்:
ஒருவேளை, 2021-இல் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்த போது, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த எடியூரப்பாவை மட்டும் பாஜக தலைமை மாற்றாமல் இருந்திருந்தால் அக்கட்சி மேலும் வலுவடைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. மாறாக, எடியூரப்பாவை தூக்கிவீசிய பாஜக தலைமைப் பீடம், அந்த இடத்தில் பசவராஜ் பொம்மையை அமர்த்தியது. தனது கையில் ஆட்சி வந்ததும், கர்நாடகாவின் அரசியல் களம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரியாமல் இஷ்டத்துக்கு விளையாட ஆரம்பித்தார் பொம்மை. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். வட மாநிலங்களில் பாஜக செய்யும் இந்துத்துவா அரசியலை கர்நாடகாவில் மெல்ல புகுத்தினார் பசவராஜ் பொம்மை.

அதிருப்தியை சம்பாதித்த பாஜக:
முதலில், மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. லவ் ஜிகாத்துக்கு எதிராக இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக வெளிப்படையாகவே கூறப்பட்டது. பின்னர், மாட்டிறைச்சியை தடை செய்யும் வகையில் கால்நடை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. வட மாநிலங்களை போல ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் ஒரு கும்பல் அராஜகம் செய்வதை பாஜக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் வளர்ச்சி அரசியலை எதிர்பார்த்திருந்த கர்நாடகா மக்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், பாஜக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை பேச தொடங்கினர். இதுதான் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹிஜாப் போராட்டத்துக்கு வழிவகுத்தது.

ஒக்கிலிகா மக்களின் வெறுப்பு:
கல்வி கற்கும் மாணவர்கள் மனதில் மத வெறுப்பை விதைத்துவிட்டார்களே என பாஜகவுக்கு எதிராக பெரும்பாலான மக்கள் பேச தொடங்கினார்கள். அதேபோல, ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த உரி கவுடா, நஞ்சே கவுடா ஆகிய தலைவர்கள் தான் ,திப்பு சுல்தானை கொன்றார்கள் என்றும், இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறையை கையாண்டதால் திப்பு சுல்தானை அவர்கள் வதம் செய்தார்கள் எனவும் ஒரு புதுக்கதையை பாஜக சொல்லியது. ஒக்கலிகா ஜாதி மக்களை கவர்வதற்காக பாஜக செய்த இந்த முயற்சியும் அக்கட்சிக்கு எதிராகவே திரும்பியது.

அடுத்தடுத்து ‘பேக்ஃபயர்’:
ஏனெனில், திப்பு சுல்தானை தங்கள் ஆதர்சன நாயகனாக நினைத்து வருகின்றனர் ஒக்கலிகா சமூக மக்கள். பாஜகவின் இந்தக் கதையானது, வரலாற்றில் தங்களை நம்பிக்கை துரோகிகளாக சித்தரிக்கும் முயற்சி என அந்த சமூக மக்கள் நினைத்தனர். இவ்வாறு கள எதார்த்தம் அறியாமல் அடுத்தடுத்து பாஜக கொண்டு வந்த இந்துத்துவா சார்ந்த அரசியல் கொள்கைகளும், முடிவுகளும் அக்கட்சிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்தது. வட மாநிலங்களில் பாஜகவுக்கு கைகொடுத்து வரும் இந்துத்துவா அரசியல், கர்நாடகாவில் எடுபடவில்லை என்பதே அக்கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். என்ன செய்ய போகிறது பாஜக..? பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.