கன்னியாகுமரி : குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் – ஆத்திரத்தில் கிணற்றுக்கு குதித்த மனைவி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இட்டகவேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் புஷ்பராஜ்-ஷீபா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்து இருந்த புஷ்பராஜ், நேற்று வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த ஷீபா, வீட்டின் அருகில் இருக்கும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால், அந்த கிணற்றில் முட்டியளவுக்கே தண்ணீர் கிடந்ததால் அவர் நீரில் மூழ்கவில்லை. ஆனாலும் முப்பது அடி ஆழக்கிணற்றில் குதித்ததில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஷீபாவை கிணற்றில் இருந்து வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.
அதற்கு ஷீபா மறுப்புத் தெரிவித்து தான் அங்கேயே இருக்கப் போவதாகவும், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் ஷீபாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேலே வருமாறு அழைத்துள்ளார்.
இருப்பினும் ஷீபா புஷ்பராஜ் தினமும் குடித்துவிட்டு வருவதாகவும், அதனால் அவருடன் வாழ விருப்பம் இல்லை என்று கூறி ஷீபா, மேலே ஏறிவர மறுத்துவிட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி, தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி ஷீபாவை மீட்டனர். பின்னர் புஷ்பராஜிடமும் தினமும் குடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.