பிள்ளை நிலா: மனோபாலாவின் கம்பேக், பேபி ஷாலினியின் மிரட்டல் நடிப்பு – இது நம்ம ஊரு `எக்ஸார்ஸிஸ்ட்'!

எண்பதுகளில் வெளிவந்த ‘திகில்’ திரைப்படங்களில் இன்றும் நினைவில் கொள்ளத்தக்கப் படம் ‘பிள்ளை நிலா’. சிறுமிக்குப் பேய் பிடிப்பது, மறுபிறவி அடைவது, பண்ணை வீட்டில் ஆவி நடமாடுவது போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட ‘ஹாரர்’ திரைப்படங்கள் ஹாலிவுட்டில் பெரும் வெற்றியடைந்தன. ‘தி எக்ஸார்ஸிஸ்ட்’, ‘தி ஓமன்’ போன்ற திரைப்படங்கள், தமிழகத்திலும் கூட பரபரப்பான வெற்றியை அடைந்தன. ‘‘தி எக்ஸார்ஸிஸ்ட்’ படத்தைப் பயப்படாமல் திரையரங்கில் தனி ஆளாகப் பார்த்தால் பெரும் பரிசு’ என்பது போன்ற விளம்பரங்கள் அப்போது உற்சாகமாக வலம் வந்தன.

இந்தப் பாதிப்பில் தமிழில் உருவான திரைப்படங்களுள் முக்கியமானது ‘பிள்ளை நிலா’. தன்னுடைய காதல் நிறைவேறாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் ஓர் இளம்பெண்ணின் ஆவி, ஒரு சிறுமியின் உடலில் புகுந்து கொண்டு காதலனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்க நினைக்கிறது. ஆவி புகுந்த சிறுமியாக பேபி ஷாலினி நடித்து அசத்தியிருந்தார். மலையாளத்தில் அவர் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும், தமிழில் ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தில் அவரை மிகவும் பிரபலமாக்கியது ‘பிள்ளை நிலா’ திரைப்படம்தான்.

Manobala | மனோபாலா

மனோபாலாவின் தற்கொலையைத் தடுத்த ‘பிள்ளை நிலா’

தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் இது. மனோபாலா இயக்கிய முதல் திரைப்படமான ‘ஆகாய கங்கை’ தோல்வியடைந்தது. நடிகர் மோகன் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மனோபாலா. அந்த நட்பு காரணமாக மோகன் வாய்ப்பு தர, மனோபாலா அடுத்து இயக்கிய ‘நான் உங்கள் ரசிகன்’ படமும் தோல்வியை அடைந்தது. இளையராஜா தயாரித்த இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் ‘ஹிட்’ என்றாலும் படம் வெற்றியைப் பெறவில்லை.

பாரதிராஜாவிடம் பல திரைப்படங்களில் உதவியாளராக இருந்து மிகுந்த அனுபவம் பெற்றவரான மனோபாலா, தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் மனச்சோர்விற்கு ஆளானார். ‘தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்னும் அளவிற்கு அவரது சோர்வு அமைந்தது. இந்த நிலையில் கலைமணியின் மூலம் ‘முதல் வசந்தம்’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ‘மணிவண்ணன் இயக்கினால்தான் நன்றாக இருக்கும்’ என்று இதர தயாரிப்பாளர்கள் கருதியதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.

பிள்ளை நிலா

சோர்வின் உச்சிக்கே சென்ற மனோபாலாவை, கண்ணதாசன் எழுதிய ‘கால மகள் கண் திறப்பாள் சின்னையா’… என்கிற திரையிசைப்பாடல்தான் ஆற்றுப்படுத்தியது. திருச்சி வெக்காளி அம்மனிடம் மிக உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்தார் மனோபாலா. அந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. மீண்டும் அழைத்த கலைமணி, “மோகன் கால்ஷீட் தரேன்னு சொல்லிட்டாரு. ஆனா டைரக்ஷன் நீதான் செய்யணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு” என்று சொல்ல, மனோபாலாவிற்கு ஆனந்தக் கண்ணீர். வாய்ப்பு தேடிய காலத்தில் தனக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்த மனோபாலாவை மறக்காமல் ஆதரிக்க முன்வந்தார் மோகன். அப்போது மோகன் பல திரைப்படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ‘இரவு நேரங்களில் நடித்துத் தருகிறேன்’ என்று சொன்னார். எனவே இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு எழுதப்பட்ட திரைக்கதைதான் ‘பிள்ளை நிலா’. இதன் பிறகு மனோபாலா பிஸியான இயக்குநராக மாறுவதற்குக் காரணமாக இந்தத் திரைப்படம் அமைந்தது.

சிறுமிக்குள் புகுந்து விடும் இளம்பெண்ணின் ஆவி

மிகப்பெரிய செல்வந்தரான டேவிட்டின் செல்லத் தங்கை டாலி. அவளுடைய மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார் டேவிட். மிதமிஞ்சிய செல்வம், செல்லம் காரணமாகப் பிடிவாதக் குழந்தை போல் வளரும் டாலி, தான் விரும்பியதையெல்லாம் செய்கிறார். கல்லூரி முதல்வர் தன்னை கேள்வி கேட்ட காரணத்தினால், அடுத்த நிமிடமே அந்தக் கல்லூரியை விலைக்கு வாங்கி விடுகிறார். கல்லூரித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அனைவருமே டாலிக்கு ஆதரவு தர, ஒருவன் மட்டும் எதிர்த்து நிற்கிறான். வேறு யார்? அவன்தான் ஹீரோ மோகன். வழக்கம் போல் இருவருக்கும் மோதல் ஆரம்பித்து காதலில் முடிகிறது. மோகனை டாலி காதலிக்க ஆரம்பிக்கிறாள். இந்த விஷயம் மோகனுக்கு இன்னமும் தெரியாது.

பிள்ளை நிலா

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு மோகனைத் தங்களின் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தும் டாலி, வெளிநாடு சென்று விடுகிறாள். திரும்பி வந்ததும் தன் காதலைச் சொல்லித் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது அவளது உத்தேசம். ஆனால் அதற்குள் மோகனுக்கும் அவனது முறைப்பெண்ணுக்கும் திருமணம் நடந்து விடுகிறது. வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் டாலி, இதைக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்தாலும் தன்னையும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். மோகன் இதை மறுக்க, கட்டடத்திலிருந்து குதித்து டாலி தற்கொலை செய்து கொள்கிறாள். மிகச் சரியாக அதே நேரத்தில் மோகனின் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

டாலியின் ஆவி, குழந்தையின் உடலில் புகுந்துள்ளதை ஒரு கட்டத்தில் அறியும் மோகன் அதிர்ச்சியடைகிறான். தன்னை ஏமாற்றிய காதலனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்கும் செயல்களில் ஆவி ஈடுபடுகிறது. இதற்காகச் சிறுமியின் உடலைப் பயன்படுத்திக் கொள்கிறது. மோகனின் அம்மா மர்மமான முறையில் இறந்து போகிறாள். மீதமிருப்பது மோகனும் அவனது மனைவியும்.

மோகனின் குடும்பத்துக்கு என்னவானது, டாலி தன் பழியைத் தீர்த்துக் கொண்டாளா என்பதையெல்லாம் பரபரப்பான, திகிலான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

மோகன் – நளினி – பேபி ஷாலினி

ஹீரோவாக மோகன். ஒரு மிடில் கிளாஸ் நாயகனின் குணாதிசயத்தை வழக்கம் போல் மிகச் சரியாகக் கொண்டு வந்து விடுகிறார். ‘மேடம்… மேடம்…’ என்று நன்றியுணர்ச்சியுடன் ராதிகாவை அழைப்பது, அம்மாவிடம் பாசமாக இருப்பது, முறைப்பெண்ணிடம் வழிவது என்று இவரது பிரத்யேக பிராண்ட் நடிப்பு நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. ராதிகாவின் ஆவி தனது மகளிடம் புகுந்து குடும்பத்தை அழிக்க நினைக்கிறது என்பதை அறிந்த அடுத்த கணத்திலிருந்து வேறோரு நபராக மாறி வித்தியாசமான நடிப்பைத் தந்திருக்கிறார் மோகன்.

பிள்ளை நிலா

புவனாவாக நளினி. முறைப்பெண் என்கிற உரிமையோடு மோகனிடம் செல்லம் கொஞ்சும் இவர். தன் குழந்தைக்கு ஆபத்து என்பதை அறிந்தவுடன் “என்னை வேணா கொல்லட்டும். அதுக்காக என் குழந்தையை வெறுக்க முடியாது” என்று ஒரு தாயாக மாறிக் கதறுவதும், ஆவி புகுந்த நிலையில் அறையில் அடைக்கப்பட்ட சிறுமி, “பசிக்குதும்மா… கதவைத் தொறந்து விடு…” என்று கெஞ்சும் போது, தத்தளிப்பான மனநிலையில் தவிப்பதும் என்று நிறைவான நடிப்பைத் தந்துள்ளார்.

‘கௌரவ வேடத்தில் ராதிகா’ என்று டைட்டில் கார்டில் வருகிறது. ஆனால் படம் முழுக்க ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார் ராதிகா. ஆங்கிலப் பாணியிலான உடல்மொழி, மொழி உச்சரிப்பு, ஸ்டைல் போன்றவை ராதிகாவுக்கு இயல்பாகவே வரும். இந்தப் படத்தில் பிடிவாதம், கோபம், ஆசைப்பட்டதை எப்படியாவது அடைய முயற்சி செய்யும் ஆங்காரம் போன்ற உணர்வுகளைச் சிறப்பான முகபாவங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பணக்காரத்திமிர் பிடித்த பெண்ணாக முதலில் வருவதும், மோகனின் நற்குணத்தை அறிந்து காதலில் விழுந்தவுடன் மாறுவதும், தனது திருமணக் கனவு நொறுங்கிப் போனதை அறிந்து அதிர்ச்சியடைவதும் என்று ஒரு பிடிவாதக்காரியின் சித்திரத்தைச் சிறப்பாகப் பிரதிபலித்துள்ளார்.

திகில் காட்சிகளில் அசத்தியுள்ள பேபி ஷாலினி!

பிற்பாதியில் வந்தாலும் படத்தின் முக்கியமான கேரக்டர் பேபி ஷாலினிதான். இவருடைய ‘க்யூட்’ ஆன ஹேர்ஸ்டைல் அந்தக் காலகட்டத்துச் சிறுமிகளிடையே பிரபலமாக விளங்கியது. ஒரு ‘துருதுரு’ சிறுமியாக ஆரம்பக் காட்சியில் வந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறார். இவரிடம்தான் ராதிகாவின் ஆவி புகுந்திருக்கிறது என்பது நமக்குத் தெரிந்தவுடன் அதற்கேற்ப பீதியை உருவாக்கும் நடிப்பைத் தந்துள்ளார். ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ என்று தன் பாட்டியின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணைப் பயங்கரமாக உருட்டிக் கொல்ல முயற்சி செய்யும் போது நமக்கே திகிலாகத்தான் இருக்கிறது. பொருத்தமான காட்சிக் கோணங்களை வைத்து பேபி ஷாலினியிடம் நன்றாக வேலை வாங்கியுள்ளார் மனோபாலா.

பிள்ளை நிலா

தன் செல்லத் தங்கைக்காக எதையும் செய்யும் பாசமிகு அண்ணனாக சில காட்சிகளில் வந்து போகிறார் ஜெய்சங்கர். “உன் சாவுக்குக் காரணமாக இருந்தவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன்” என்று சபதம் எடுக்கிறார். மோகன்தான் அதற்குக் காரணம் என்பது இவருக்குத் தெரியாதது திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் மோகனுக்கு ஆதரவாகவே இவர் மாறுவது நல்ல திருப்பம்.

ஹாலிவுட் படம் என்றால் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே திகில் காட்சிகள் ஆரம்பமாகி விடும். ஆனால் இது தமிழ்ப்படம் என்பதால் முற்பாதி வரை பயங்கரமாகச் சோதிக்கிறார்கள். உண்மையில் இந்தப் படம் இடைவேளைக்குப் பின்புதான் ஆரம்பமாகிறது. அதற்கு முன்பு வரை மோகனுக்கும் ராதிகாவிற்குமான மோதல், காதல், நளினியுடன் ரொமான்ஸ் என்று தத்துப் பித்து காட்சிகளால் அலுப்பூட்டுகிறது. ‘பசி’ நாராயணனுடன் இணைந்து கொண்டு கல்லூரி முதல்வராக தேங்காய் ஸ்ரீனிவாசன் செய்யும் கொனஷ்டைகள் சிரிப்புக்குப் பதிலாக எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இதைப் போலவே ராதிகாவின் உதவியாளராக வரும் ஜனகராஜ் மற்றும் சின்னி ஜெயந்தின் செயற்கையான காமெடியும் அலுப்பூட்டுகிறது. ஆவியைப் பிடிக்க வரும் நம்பூதிரியாக ஒரு காட்சியில் வந்து திகிலூட்டுகிறார் சங்கரன். (மௌனராகம் சந்திரமௌலி). ஆவியை வரவழைத்து உரையாடும் சர்வதேச ஸ்பெஷலிஸ்ட்டாக வித்தியாசமான கெட்டப்பில் வந்து மிரட்டுகிறார் சத்யராஜ்.

‘ராஜா மகள்… ரோஜா மகள்…’

ராதிகாவின் ஆவி பேபி ஷாலினிக்குள் இருக்கிறது என்பது தெரிந்தவுடன் படம் விறுவிறுப்பாக நகர ஆரம்பிக்கிறது. அதற்குப் பிறகு ஜெட் வேகம்தான். ஆளே இல்லாமல் ஓடும் கார் மோகனைத் துரத்துவது, அவர் கோயிலுக்குள் புகுந்து தப்பிப்பது, மோகனின் வீட்டில் சோபாக்கள் அங்குமிங்குமாக ஆவேசமாக நகர்ந்து நளினியைத் தள்ளுவது, பல பொருள்கள் அந்தரத்தில் சுற்றுவது, கல்லறையைத் தோண்டும் காட்சிகள் போன்றவை திகிலைக் கிளப்புகின்றன.

பிள்ளை நிலா

அது எந்த ஜானர் திரைப்படமாக இருந்தாலும் அதற்கேற்ப கூடு பாய்ந்து விடுவதில் வல்லவர் இளையராஜா. திகில் படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று பின்னணி இசை. இந்த ஏரியாவில் ரகளை செய்திருக்கிறார் ராஜா. ஆளில்லாத கார், மோகனைத் துரத்தும் போது ஒலிக்கும் பின்னணி இசை ஒன்று போதும். படத்தின் ஆரம்பத்திலேயே மேகத்தின் இடையில் நிலா நகரும் காட்சியில் திகிலான இசையைத் தந்து படத்தின் தொனியை நிறுவிவிடுகிறார். பிலிம் ரோல் ஏறத்தாழ தீர்ந்து, மிச்சமிருந்த படச்சுருளில் எடுக்கப்பட்ட ஷாட் அது. அதைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி திகிலை வரவழைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் பின்னணி இசை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக ஆறு நாள்களை எடுத்துக் கொண்டார் ராஜா. ஒரு படத்தின் ‘Background Score’ தனி ஆல்பமாக வருவது இப்போது சாதாரணமான விஷயமாக இருக்கலாம். ஆனால் அந்தக் காலகட்டத்தில், ஒரு படத்தின் பின்னணி இசை தனியாக வெளியிடப்பட்டது, ‘பிள்ளை நிலா’ படத்திற்காகத்தான்.

‘ராஜா மகள்… ரோஜா மகள்…’ என்கிற அற்புதமானதொரு பாடலைத் தந்திருந்தார் இளையராஜா. ஜெயச்சந்திரனும் ஜானகியும் சிறப்பாகப் பாடியிருந்தார்கள். ‘வையகமும் வானகமும், கை வணங்கும் தேவதை’ என்று பாடல் வரிகளைக் கவித்துவமாக எழுதியிருந்தார் வாலி. இதே பாடலை குழந்தையின் குரலில் ஜானகி பாடியிருந்தது சிறப்பு. ராதிகாவைப் புகழ்ந்து மோகன் பாடிய இந்தப் பாடலை, பேபி ஷாலினி பாடும் போது ‘இது எப்படி இவளுக்குத் தெரியும்?’ என்று மோகன் அதிர்ச்சியடைவது சுவாரஸ்யமான திருப்பம்.

பாத்திரத்தின் படி ராதிகா கிறிஸ்துவர் என்பதால் அவரது சடலம் புதைக்கப்பட்டிருக்கும். ‘ஆசை நிறைவேறாமல் அலையும் ஆத்மாவின் உடலை எரித்தால்தான் சிறுமியைப் பிடித்துள்ள ஆவி நீங்கும்’ என்று நம்பூதிரி சொல்வார். எனவே பிணத்தை ரகசியமாகத் தோண்டி எரிக்க முயல்வார் மோகன். பிறகு கிறிஸ்துவ சபையின் அனுமதியைக் கோருவார். இப்படி மதப் பிரச்னையின் முரண் இருந்தாலும் ‘யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல’ என்று இறுதியில் சமாதானமாக டைட்டில் கார்டு போட்டு விடுகிறார்கள். பொதுவாகவே ஹாரர் படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது. இந்த தமிழ் வடிவத்தில் லாஜிக்கையே மறந்துவிட்டால் திகில் காட்சிகளை ரசிக்கலாம்.

பிள்ளை நிலா

தமிழில் வெளியான ஹாரர் திரைப்படங்களின் முன்னோடி என்கிற வகையிலும் ராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை, பேபி ஷாலினி உள்ளிட்டவர்களின் நடிப்பு, முற்பாதியில் இழுவையாக அமைந்தாலும் பிற்பாதியில் அமைக்கப்பட்டிருக்கும் திகிலான காட்சிகளின் சுவாரஸ்யங்கள் போன்றவற்றுக்காக இன்றும் கூட ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது, இந்த ‘பிள்ளை நிலா’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.