நேற்று நடைபெற்ற பெங்களூர்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வருண் சக்கரவர்த்தி 8 போட்டிகளில் விளையாடி இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். நேற்றைப் போட்டியின் வெற்றிக்கும் அவர் முக்கிய பங்காற்றியிருந்தார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை வென்ற வருண் சக்கரவர்த்தி பேசும்போது, “ பந்துவீச்சில் வேரியேஷன்களை கொண்டு வருவது கிடையாது. எப்போதும் துல்லியமாக பந்து வீசுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பந்து வீசுவதில் முயற்சி செய்து பல வேலைகளை செய்து வருகிறேன். இதற்காக நான் பிரதீபன் மற்றும் அபிஷேக் நாயர் இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குக் கிடைத்த இந்த விருதை அண்மையில் பிறந்த என் குழந்தை ஆத்மான் மற்றும் என் மனைவி நேஹாவுக்கு இதை சமர்பிக்கிறேன். ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் எனது மகனை பார்க்க முடிவதில்லை. போட்டிகள் முடிந்த பிறகே பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.